சர்வதேச சுற்றாடல் தினம் இன்று

சர்வதேச சுற்றாடல் தினம் இன்று

by Staff Writer 05-06-2019 | 7:55 AM
Colombo (News 1st) வளி மாசடைவதால் வருடாந்தம் இலங்கையில் 4300 பேர் உயிரிழப்பதாக, சுகாதார அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதன் காரணமாக உலகளாவிய ரீதியில் வருடாந்தம் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் 3 பில்லியனுக்கும் அதிகமானவர்கள் வளி மாசடைவதால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைப்புகளை மேற்கோள்காட்டி மத்திய சுற்றாடல் அதிகார சபை தகவல் வௌியிட்டுள்ளது. இந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு, வளி மாசடைவதை கட்டுப்படுத்தல் என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த வருடம் சர்வதேச சுற்றாடல் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இன்று அனுஷ்டிக்கப்படும் சர்வதே சுற்றாடல் தினத்திற்கான தேசிய நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை (6ஆம் திகதி) நடைபெறவுள்ளது. இலங்கையில் 60 வீதம் வளி மாசடைவதற்கு வாகனங்களிலிருந்து வௌியேறும் புகையே காரணம் எனவும் மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, கைத்தொழில்துறை காரணமாக 10 வீதம் வளி மாசடைவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வீடுகளில் 8 வீத வளி மாசடைதல் ஏற்படுவதாகவும் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு தொழிற்சாலைகளில் இடம்பெறும் வளி மாசடைவதை கட்டுப்படுத்துவதற்கான புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக, மத்திய சுற்றாடல் அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.