சம ஊதியத்தை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம்

சம ஊதியத்தை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் சுவிட்ஸர்லாந்து பெண்கள்

by Staff Writer 05-06-2019 | 9:06 AM
Colombo (News 1st) சுவிட்ஸர்லாந்தில் சம ஊதியம் வழங்குமாறு வலியுறுத்தி 30 ஆண்டுகளின் பின்னர் முதலாவது வேலைநிறுத்தப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. சுவிட்ஸர்லாந்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சமமான ஊதியம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்து 1991ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் திகதியே இறுதியாக வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டம் நடத்தப்பட்டு 30 வருடங்கள் கடந்தும் தமது கோரிக்கைக்கான தீர்வில் பெரியளவு மாற்றம் எதும் ஏற்படவில்லை என, தொழிற்சங்கங்களும் மகளிர் உரிமைகள் அமைப்புகளும் சுட்டிக்காட்டியுள்ளன. "சம உரிமை, சம ஊதியம்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் போராட்டம் நடத்த நாடு முழுவதிலும் உள்ள பெண்கள் தயாராகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. நாடு தழுவிய ரீதியில் எதிர்வரும் 14ஆம் திகதி, வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. சுவிட்ஸர்லாந்தில் பெண்களின் ஊதியம் ஆண்களின் ஊதியத்தை விட 20% குறைவாகவே உள்ளது. கல்வித்தகுதியும் துறை சார்ந்த அனுபவமும் சமமாக இருந்தாலும் சேவைக்காலத்தில், பெண் என்ற ஒரே காரணத்தினால் ஊதியம் ஊடாக சுமார் 2 கோடி இந்திய ரூபாய்க்கும் அதிக தொகையை அவர்கள் இழக்கின்றமை கண்டறியப்பட்டது. சுவிட்ஸர்லாந்தின் மிகப்பெரிய தொழிற்சங்கமான யூ.என்.ஐ.ஏ. வினால் கடந்த வருடம் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.