Colombo (News 1st) யாழ். மாவட்ட புதிய தேர்தல் அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
99 மில்லியன் ரூபா செலவில் மாவட்டத்திற்கான புதிய தேர்தல் அலுவலகம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
இதற்கான நிகழ்வில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்நாயக்க, தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் ரட்ணஜீவன் ஹூல், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்,
ஜனநாயக தேர்தல் சட்டம் என்று ஒரு சட்டம் இருக்கிறது. அதன்படி தேர்தல் திகதியை குறிக்கும் அதிகாரம் ஆணைக்குழுவிற்கு மட்டுமே உள்ளது. நாங்கள் ஆலோசித்து ஜனாதிபதியிடம் கடந்த வாரம் சென்ற போது, நவம்பர் 15-க்கும் டிசம்பர் 7-க்கும் இடையில் நடத்தப்பட வேண்டும், நாங்கள் அதனை தீர்மானிப்போம் என்று தெரிவித்திருந்தோம். எங்களுடன் பேசி இரண்டு நாட்களில் இந்தியா சென்றிருந்த போது 7 ஆம் திகதி நடக்கும் என்று ஜனாதிபதி சொல்லியிருக்கின்றார். நவம்பர் 15-க்கும் டிசம்பர் 7-க்கும் இடையில் எந்த நாளில் தேர்தல் நடக்கும் என்பதை ஆணைக்குழு தான் தீர்மானிக்கும். ஆனால், ஜனாதிபதி சொன்ன 7 ஆம் திகதி நடக்காது என்று தான் நான் நம்புகிறேன்.