இலங்கை அணியின் வெற்றி குறித்து ஹத்துருசிங்க

ஆப்கானுடனான வெற்றி வீரர்களின் மனநிலையை உயர்வடைய செய்துள்ளது - சந்திக்க ஹத்துருசிங்க

by Staff Writer 05-06-2019 | 1:32 PM
Colombo (News 1st) உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியில் வெற்றியீட்டியமையானது அணி வீரர்களின் மனநிலையை உயர்வடையச் செய்துள்ளதாக, இலங்கை அணியின் பிரதான பயிற்றுநரான சந்திக்க ஹதுருசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, அணி வீரர்களின் திறமையை வெளிப்படுத்துவதற்கும் போட்டிகளில் தோல்வியடைகின்ற சந்தர்ப்பத்தில் ஏற்படும் அழுத்தத்தை புரிந்துகொள்வதற்கும் இந்த வெற்றி அவசியமானதொன்று எனக் கூறிய அவர், இந்த வெற்றியின் மூலமாக எமது மனநிலை உயர்ச்சி நிலையை அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும் தாம் விளையாடிய இரு ஆடுகளங்களுமே சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கு ஏதுவான ஆடுகளங்கள் அல்ல எனவும் தற்போதைய நிலையில் தாம் விளையாடியுள்ள 4 ஆடுகளங்களை காட்டிலும் இவை கடினமானவை எனவும் கூறியுள்ளார். குறித்த ஆடுகளங்களில் 350 ஓட்டங்களை பெற முடியும். எவ்வாறாயினும் நாணயச் சுழற்சியில் வெற்றி பெறாமலேயே துடுப்பெடுத்தாடுவதற்கான வாய்ப்பு கிட்டியமையும் நேற்றைய வெற்றிக்கான காரணமாக அமைந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, எஞ்சியுள்ள போட்டிகளில் ஏஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் குசல் மென்டிஸ் ஆகியோர் பிரகாசிப்பார்கள் என எதிர்ப்பார்ப்பதாகவும் சந்திக்க ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். சில வீரர்கள் துடுப்பெடுத்தாடும்போது சிரமங்களை எதிர்க்கொள்வதாகக் கூறிய அவர், சில துடுப்பாட்ட வீரர்கள் திறமையை வெளிப்படுத்துகின்றதாகவும் அவர்கள் தமது திறமையை மேலும் அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதோடு துடுப்பாட்ட பாணியை மாற்றி விளையாடும் பட்சத்திலும் இந்த ஆடுகளங்களில் பிரகாசிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.