ஆப்கானுக்கு எதிரான போட்டியில் இலங்கை அபார வெற்றி

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இலங்கை 34 ஓட்டங்களால் வெற்றி

by Staff Writer 05-06-2019 | 6:40 AM
Colombo (News 1st) உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியில் இலங்கை அணி டக்வேர்த் லூயிஸ் முறைப்படி 34 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. நேற்றைய போட்டி நடைபெற்ற கார்டிப் மைதானத்தில் இலங்கை அணி அடைந்த முதலாவது சர்வதேச ஒருநாள் வெற்றி இதுவாகும். கார்டிப்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 33 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 182 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆட்டம் மழை காரணமாக தடைப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா 41 ஓவர்கள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இலங்கை அணி 36.5 ஓவர்களில் 201 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. இலங்கை அணி சார்பாக குசல் ஜனித் பெரேரா அதிகபட்சமாக 78 ஓட்டங்களை பெற்றார். மொஹமட் நபி 4 விக்கெட்களை வீழ்த்தினார். இதனையடுத்து, ஆப்கானிஸ்தான் அணிக்கு டக்வேர்த் லூயிஸ் முறைப்படி 41 ஓவர்களில் 187 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அந்த இலக்கை நோக்கி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் ஆரம்பத்திலேயே இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது. முதல் 5 விக்கெட்களும் 57 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டபோதும் குல்படின் நய்ப் மற்றும் நஜ்புல்லா சட்ரான் ஜோடி ஆறாவது விக்கெட்டில் பெறுமதியான 64 ஓட்டங்களை பகிர்ந்து வெற்றியை ஆப்கானிஸ்தானுக்கு சாதகமாக்கியது. 25ஆவது ஓவரில் குல்படின் நய்ப்பின் விக்கெட்டை கைப்பற்றிய நுவன் பிரதீப் மீண்டும் வெற்றியீட்டும் நம்பிக்கையை இலங்கை அணிக்கு உருவாக்கினார். தொடர்ந்து ரஷீட் கான் போல்டாக , நஜ்புல்லா சட்ரான் 43 ஓட்டங்களுடன் ரன் அவுட் ஆனார். இலங்கை அணியின் வெற்றி ஓரளவுக்கு உறுதியான நிலையில் ஹமிட் ஹஸனை போல்டாக்கிய லசித் மாலிங்க இலங்கை அணியின் வெற்றியை உறுதி செய்தார். போட்டியில் டக்வேவர்த் லூயிஸ் முறைப்படி இலங்கை அணி 34 ஓட்டங்களால் வெற்றியீட்டியதுடன் இவ்வருட உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி அடைந்த முதல் வெற்றி இதுவாகும். 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6ஆம் திகதி ஸிம்பாப்வேவுக்கு எதிரான போட்டிக்கு பின்னர் லசித் மாலிங்க இலங்கை அணிக்காக 21 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருந்தார். அதில் எந்தவொரு போட்டியிலும் இலங்கை அணி வெற்றியீட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும், 698 நாட்களுக்கு பின்னர் லசித் மாலிங்க இலங்கை அணிக்கு ஒருநாள் போட்டி வெற்றியொன்றை நேற்றைய போட்டியில் ஈட்டிக் கொடுத்திருந்தமை சிறப்பம்சமாகும்.