நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வாழ்த்துச் செய்திகள்

நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வாழ்த்துச் செய்திகள்

எழுத்தாளர் Staff Writer

05 Jun, 2019 | 7:36 am

Colombo (News 1st) இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை இன்று (5ஆம் திகதி) கொண்டாடுகின்றனர்.

ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பலரும் தமது வாழ்த்துச் செய்திகளை பகிர்ந்துள்ளனர்.

அடுத்தவர்களது பசியை உணர்ந்து அவர்களுக்கு கொடுத்து வாழ்வதற்கு பழகும் சமயத்தை பின்பற்றும் சமூகம் மனித குலத்திற்கு கிடைத்த கொடை என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமது சமயக் கடமைகளை நிறைவுசெய்து இன்றைய தினத்தில் ஈகைத் திருநாளை கொண்டாடும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

அனைவரினதும் பிரார்த்தனைகளால், சூழ்ந்திருக்கக்கூடிய அவநம்பிக்கை, சந்தேகம் ஆகியன நீங்கி சகோதரத்துவத்துடன் கைகோர்த்து வாழக்கூடிய எதிர்காலம் அமையும் என எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தமது வாழ்த்துச் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஒரு மாத காலம் நோன்பு நோற்று இன்றைய நாளில் ஈதுல் பித்ர் பெருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

நன்றியுணர்வு, தாராள மனப்பான்மை உள்ளிட்ட உயர்ந்த எண்ணங்களை உலகுக்கு எடுத்துக்காட்டுவதாய் இன்றைய நாள் அமைந்துள்ளதாக பிரதமர் தனது வாழத்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஒற்றுமை, சுதந்திரம், சமத்துவம் மற்றும் மனித விழுமியங்களுக்கு மதிப்பளித்து அனைவரும் ஒருதாய் மக்கள் என்ற ரீதியில் செயற்பட வேண்டும் என்பதை ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் உணர்த்துவதாக, பிரதமர் வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம், தீவிரவாதத் தாக்குதல்களின் பின்னர் இலங்கை முஸ்லிம் சமூகம் பல பிரச்சினைகளையும் சவால்களையும் எதிர்கொண்டிருக்கும் இத்தருணத்தில் சகல முஸ்லிம்களும் பொறுமையுடனும் நிதானத்துடனும் செயற்படுமாறு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கோரிக்கை விடுத்துள்ளது.

புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.

இனங்களுக்கிடையே சமாதானத்தையும் அமைதியையும் ஏற்படுத்த இன்றைய நாளில் இறைவனை பிரார்த்திப்பதாகவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்