by Staff Writer 05-06-2019 | 12:10 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட மறுநாள் அரேபிய பிரஜைகள் மூவரை நாட்டிலிருந்து அனுப்ப முயற்சித்தமை தொடர்பில் ஐவரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குறித்த அரேபிய பிரஜைகளை சந்தித்த, அவர்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்பாடு செய்த மற்றும் மொழி பெயர்ப்பு செய்தவர்கள் ஆகியோரிடமே பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
கல்முனை மற்றும் காத்தான்குடி பகுதிகளை சேர்ந்தவர்களிடமே இவ்வாறு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட ஏப்ரல் 21ஆம் திகதிக்கு மறுநாள், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் M.L.A.M. ஹிஸ்புல்லா மற்றும் அரேபிய பிரஜைகள் மூவரும் பாசிக்குடா பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் சந்தித்தமை தொடர்பிலான சிசிரிவி காணொளிகள் பொலிஸ் பயங்கரவாத விசாரணைப்பிரிவினருக்கு கிடைத்துள்ளன.
குறித்த அரேபிய பிரஜைகளுடன் தொடர்புகளை பேணியவர்கள் தங்களின் குடும்பத்துடன் சவுதிக்கு சென்றுள்ளமை தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல்கள் நடத்தப்பட்டதன் பின்னர் மறுநாள் இரவு அரேபிய பிரஜைகள் மூவரும் பதற்றமான நிலையில் ஹோட்டலை விட்டு வௌியேறியமையும் காணொளியில் பதிவாகியுள்ளது.
இவர்கள் என்ன நோக்கத்திற்காக இலங்கைக்கு வருகை தந்தார்கள் என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.