முஸ்லிம்களை இலக்கு வைத்து வன்முறை: இஸ்லாமிய அரசுகள் அமைப்பின் நாடுகள் கூட்டறிக்கை 

by Staff Writer 04-06-2019 | 8:40 PM
Colombo (News 1st) முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் வன்முறை தொடர்பில் இஸ்லாமிய அரசுகள் அமைப்பின் நாடுகளின் இலங்கையிலுள்ள உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் தூதரகம் ஆகியன கூட்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன. இந்த வன்முறைகள் வலய மற்றும் பூகோள பாதுகாப்பிற்கு எதிரான அச்சுறுத்தலாகும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக முஸ்லிம் மக்கள் மற்றும் சில முஸ்லிம் அகதிகளின் பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் கவலையடைவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தூரப்பகுதியிலுள்ள கிராமத்தில் இடம்பெறும் மிகச்சிறிய சம்பங்கள் கூட, இணையத்தளமூடாக பாரிய சம்பவங்களாக் காண்பிக்கப்படும் நிலையால், பாரிய வன்முறை ஏற்படும் அபாயமுள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறான நிலைமை ஏற்படுவதைத் தவிர்த்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு இந்த அறிக்கையூடாக இலங்கை அரசாங்கத்திடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.