ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிரான வழக்கு விசாரணை

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிரான வழக்கு விசாரணை

by Staff Writer 04-06-2019 | 3:08 PM
முன்னாள் அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தொடர்ந்துள்ள வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது நிராகரிக்குமாறு கோரி சமர்ப்பித்த கோரிக்கையை நீதிமன்றம் இன்று (04) நிராகரித்துள்ளது. இன்று இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இதனை அறிவித்ததுடன், எதிர்வரும் ஆகஸ்ட் 9ஆம் திகதி முதல் குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சதொசவின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ, முன்னாள் செயற்பாட்டுப் பணிப்பாளர் மொஹிதீன் காஜா மொஹமட் சாஹிர் ஆகியவர்களுக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2010 - 2015 காலப்பகுதியில் சதொச ஊழியர்கள் 153 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டு, அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டதால், அரசாங்கத்திற்கு 4 கோடிக்கும் அதிக நட்டம் ஏற்படுத்தியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.