குருணாகல் வைத்தியர் மீது தொடர்ந்தும் முறைப்பாடுகள்

குருணாகல் வைத்தியர் மீது தொடர்ந்தும் முறைப்பாடுகள்

by Staff Writer 04-06-2019 | 11:21 AM
Colombo (News 1st) குருணாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் சேகு ஷிஹாப்தீன் மொஹம்மட் சாபிக்கு எதிராக இதுவரை 544 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதனை விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட குழுவினூடாக பரிந்துரைக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து இன்றைய தினம் (4ஆம் திகதி) தீர்மானிக்கப்படவுள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பரிந்துரைக்கப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட குழுவுடன் கலந்துரையாடவுள்ளதாக சுகாதார அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வைத்தியர் சேகு ஷிஹாப்தீன் மொஹமட் சாபிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளை ஆராய்வதற்காக சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கை சுகாதார அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேராவிடம் நேற்று (3ஆம் திகதி) சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த அறிக்கையில் 4 விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. விசாரணைக்குழுவின் அங்கத்தவர்களை அதிகரித்தல் மற்றும் விரிவாக்குதல் அந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள முதலாவது விடயமாகும். குருணாகல் வைத்தியசாலையில் சிசேரியன் சத்திரசிகிச்சையினூடாக இரு தடவைகள் பிரசவம் மேற்கொண்ட அனைத்து பெண்களினதும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகளை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் மேற்கொள்ளுதல் இடைக்கால அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள இரண்டாவது விடயமாகும். விசாரணைகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்காக விசாரணைக் குழுவுக்கு தேவைப்படும் ஒத்துழைப்புகளை வழங்குமாறு குருணாகல் வைத்தியசாலையின் பணிப்பாளர் உள்ளிட்ட நிர்வாகக்குழுவுக்கு அறிவித்தல் மற்றும் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் சிசேரியன் சத்திரசிகிச்சை மேற்கொண்ட அனைத்து தாய்மார்கள் மற்றும் சத்திரசிகிச்சையில் இணைந்த அனைத்து வைத்தியர்களின் தகவல்களை விசாரணைக்குழுவுக்கு பெற்றுக்கொடுப்பது தொடர்பில் வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு அறிவிக்குமாறும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணை தொடர்பில் அறிக்கை கிடைத்தவுடன் வைத்தியர் சேகு சிஷாப்தீனை சேவையிலிருந்து நீக்குவதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, குறித்த வைத்தியருக்கு எதிராக இதுவரை நூற்றுக்கும் அதிகமானோரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மருத்துவ நிபுணர்கள், நரம்பியல் நிபுணர்கள், தாதியர்கள், மருத்துவ பயிலுநர்கள் மற்றும் தாய்மாரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக்குழுவின் அறிக்கை எதிர்வரும் 26 ஆம் திகதி குருணாகல் நீதவான் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்துக்களை ஈட்டியமை தொடர்பில் குருணாகல் வைத்தியசாலையின் வைத்தியர் சேகு ஷிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி, கடந்த 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.