முழு நீதியரசர்கள் குழாமை நியமிக்குமாறு கோரிக்கை

ஏப்ரல் 21 தாக்குதல்: விசாரணைக்கு முழுமையான நீதியரசர்கள் குழாமை நியமிக்குமாறு சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை

by Staff Writer 04-06-2019 | 4:55 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான பயங்கரவாதத் தாக்குதலைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைக்கு முழுமையான நீதியரசர்கள் குழாமை நியமிக்குமாறு பிரதம நீதியரசரிடம் கோரியுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இன்று உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பாக மன்றில் இன்று ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய ஜயவர்தன இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சட்ட மா அதிபருக்கு உத்தரவிடக் கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் ஏனைய சில தரப்பினர்களும் தாக்கல் செய்துள்ள மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே ஜானாதிபதி சட்டத்தரணி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரசன்ன ஜயவர்தன, L.T.B. தெஹிதெனிய மற்றும் பி. பத்மன் சூரசேன ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் பிரதிவாதியாக கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய, பேராயர் சார்பில் இன்று சட்டத்தரணி ஒருவர் மன்றுக்கு ஆஜராகியிருந்தார். இந்த மனு மீதான விசாரணையை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் ஒத்திவைத்தது.