இலங்கை - ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி தடைப்பட்டது

இலங்கை - ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி மழையால் தடைப்பட்டது

by Staff Writer 04-06-2019 | 6:26 PM
Colombo (News 1st) உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான இன்றைய போட்டி மழை காரணமாக தடைப்பட்டுள்ளது. கார்டிப்பில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடும் இலங்கை 33 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டது. எவ்வாறாயினும், போட்டியின் ஆரம்பத்தில் இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான குசல் ஜனித் பெரேரா மற்றும் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன ஜோடி சிறப்பாக விளையாடி 13.1 ஓவரில் 92 ஓட்டங்களைப் பகிர்ந்தது. அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 30 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, குசல் ஜனித் பெரேரா அரைச்சதமடித்தார். எனினும், ஏனைய வீரர்கள் பெரும் ஏமாற்றமளித்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். போட்டியில் 22 ஆவது ஓவரை வீசிய மொஹமட் நபி தனது பந்து வீச்சில் குசல் மென்டிஸ், அஞ்சலோ மெத்யூஸ், தனஞ்சய டி சில்வா ஆகியோரை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்தார். இந்த நிலையில், திசர பெரேரா 2 ஓட்டங்களைப் பெற்று ரன் அவுட் ஆனார். மத்திய வரிசையில் 13 ஓட்டங்களுக்குள் 5 விக்கெட்கள் வீழ்த்தப்பட இலங்கை அணி கடும் சிரமத்திற்குள்ளானது. ஒரு கட்டத்தில் 144 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்கள் எனும் பலமான நிலையில் இருந்த இலங்கை அணி 159 ஓட்டங்களுக்கு ஆறாவது விக்கெட்டை இழந்து பின்னடைவுக்குள்ளானது. பந்து வீச்சில் மொஹமட் நபி 9 ஓவர்களில் 30 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை கைப்பற்றினார்.