இங்கிலாந்துடனான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி

by Staff Writer 04-06-2019 | 7:43 AM
Colombo (News 1st) உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 14 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. நொட்டின்ஹோமில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி சார்பாக மொஹமட் ஹபீஸ் 84 ஓட்டங்களையும் அணித்தலைவர் சப்ராஸ் அஹமட் 55 ஓட்டங்களையும் பெற்றனர். பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 348 ஓட்டங்களை பெற்றது. இது உலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் பெற்றுக்கொண்ட இரண்டாவது அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக பதிவானது. மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாட களமிறங்கிய இங்கிலாந்து 118 ஓட்டங்களுக்கு முதல் 4 விக்கெட்களையும் இழந்து தோல்வியின் பிடிக்குள் சிக்கியது. ஜோரூட் மற்றும் ஜொஷ் பட்லர் ஜோடி ஐந்தாவது விக்கெட்டில் 130 ஓட்டங்களை பகிர்ந்து மீண்டும் வெற்றியீட்டும் நம்பிக்கையை உருவாக்கியது. ஜோரூட் சதம் கடந்த நிலையில் 107 ஓட்டங்களை பெற்றதோடு இவ்வருட உலகக்கிண்ணத்தில் முதலாவது சதத்தை பதிவு செய்த வீரராக பதிவானார். அவரது ஆட்டமிழப்புக்கு பின்னர் இங்கிலாந்து மீண்டும் சற்று தடுமாற்றத்தை சந்தித்தது. எவ்வாறாயினும் ஜொஷ் பட்லர் மீண்டும் 75 பந்துகளில் சதம் கடந்ததோடு மீண்டும் வெற்றியீட்டும் நம்பிக்கையை உருவாக்கினார். உலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து சார்பாக குறைந்த பந்துகளில் வீரர் ஒருவர் பெற்றுக் கொண்ட வேகமான சதமாக இது பதிவானது. ஜொஷ் பட்லர் 103 ஓட்டங்களை பெற்ற நிலையில் துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்தார். 48ஆவது ஓவரை வீசிய வஹாப் ரியாஸ் அந்த ஓவரில் அடுத்தடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றி வெற்றியை பாகிஸ்தானுக்கு சாதகமாக்கினார். இங்கிலாந்து அணியால் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 334 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்ததுடன் போட்டியில் 14 ஓட்டங்களால் பாகிஸ்தான் வெற்றியீட்டியது. உலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் ஓர் அணி சார்பாக இரண்டு வீரர்கள் சதம் கடந்த நிலையிலும் அந்த அணி தோல்வியடையும் முதல் சந்தர்ப்பமாக நேற்றைய இங்கிலாந்தின் தோல்வி பதிவாகியுள்ளது.