அரேபியர்களை அனுப்ப முயற்சித்தவர்களிடம் வாக்குமூலம்

அரேபிய பிரஜைகளை நாட்டிலிருந்து அனுப்ப முயற்சித்தமை தொடர்பில் ஐவருக்குஅழைப்பு

by Staff Writer 04-06-2019 | 1:36 PM
Colombo (News 1st) பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட ஏப்ரல் 21 ஆம் திகதியன்று அரேபிய பிரஜைகள் மூவரை நாட்டிலிருந்து அனுப்புவதற்கு முயற்சித்த சம்பவம் தொடர்பில் இன்றைய தினம் ஐவரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது. இதற்காக குறித்த ஐவரும் பொலிஸ் பயங்கரவாத விசாரணைப்பிரிவில் ஆஜராகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் குறித்த அரேபிய பிரஜைகளை சந்தித்த மற்றும் அவர்களுக்கான தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த 5 பேரே விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கல்முனை மற்றும் காத்தான்குடி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ஏப்ரல் 21 ஆம் திகதி கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் M.L.A.M. ஹிஸ்புல்லா மற்றும் அரேபிய பிரஜைகள் மூவரும் பாசிக்குடா பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் சந்தித்தமை தொடர்பிலான சிசிரிவி காணொளிகள் பொலிஸ் பயங்கரவாத விசாரணைப்பிரிவினருக்கு கிடைத்துள்ளன. குறித்த தாக்குதல்கள் நடத்தப்பட்ட நாளில் அரேபிய பிரஜைகள் மூவரும் பதற்றமான நிலையில் ஹோட்டலை விட்டு வௌியேறியமையும் காணொளியில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து, இவர்கள் என்ன நோக்கத்திற்காக இலங்கைக்கு வருகை தந்தார்கள் என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.