சூடானில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்: 13 பேர் பலி

சூடானில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்: 13 பேர் உயிரிழப்பு

by Staff Writer 03-06-2019 | 7:54 PM
Colombo (News 1st) சூடானில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சூடான் தலைநகர் கர்டோமில் (Khartoum) அந்நாட்டு அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாட்டில் நிலவும் இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் சிவில் ஆட்சியை கோரியும் பொதுமக்களால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஜனநாயகம் மீளெழுச்சி பெற வேண்டுமென சூடானிய எதிர்க்கட்சிகள் கூட்டாக தெரிவித்துள்ளன. நாட்டில் தற்போது இடம்பெற்றுவரும் வன்முறை சம்பவங்களுக்கும் அதனால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளுக்கும் ஆளும் இராணுவம் பொறுப்புக்கூற வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, சூடானின் முன்னைய புரட்சிகளைப் போலல்லாது, பொதுமக்கள் ஆட்சியை கோரி தற்போது பதவியிலிருப்பவர்களுக்கு எதிராக வைத்தியத்துறையினரும் போராட்டத்தில் இணைந்துள்ளனர். சூடானின் தொழிற்சங்கங்களின் பொது வேலைநிறுத்தத்திற்கான அழைப்பின் பின்னணியில் இந்த போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த 21 ஆம் திகதி முதல் பாரியளவான வேலைநிறுத்த போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில் தற்போது வைத்திய துறையினரும் அதில் இணைந்துள்ளனர். சூடானிய முன்னாள் ஜனாதிபதி ஒமல் அல் பஷீரின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின் சூடானில் சுமுகமற்ற அரசியல் நிலைமை தொடர்ந்தும் நீடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.