by Fazlullah Mubarak 02-06-2019 | 8:02 PM
கைது செய்யப்பட்டுள்ள குருணாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் சேகு ஷிஹாப்தீன் மொஹம்மட் சாபிக்கு எதிராக இன்றும் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இன்றைய தினத்தில் மாத்திரம் 10க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக குருணாகல் வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குருணாகல் வைத்தியசாலையில் வைத்தியர் சேகு ஷிஹாப்தீன் மொஹம்மட் சாபிக்கு எதிராக இதுவரை 400க்கும் அதிக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, வைத்தியர் சேகு ஷிஹாப்தீனுக்கு எதிராக தம்புள்ளை வைத்தியசாலையில் 62 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள டொக்டர் சேகு ஷிஹாப்தீன் மொஹம்மட் சாபியினால் சிசேரியன் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட தாய்மார்களை தவிர்ந்த ஏனைய சத்திர சிகிச்சைகளை மேற்கொண்ட திருமணமான மற்றும் திருமணமாகாத பெண்களுக்கும் தமக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பில் ஏதேனும் சந்தேகங்கள் இருக்குமிடத்து அவை தொடர்பில் முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியுமென குருணாகல் வைத்தியசாலையின் பேச்சாளர் கூறியுள்ளார்.
இதனிடையே, டொக்டர் சேகு ஷிஹாப்தீன் மொஹம்மட் சாபி தொடர்பில் அவருடன் பணிபுரிந்த வைத்தியர்கள் உள்ளிட்ட வைத்தியசாலை ஊழியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான விரிவான அறிக்கையை எதிர்வரும் 26 ஆம் திகதி குருணாகல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக விசாரணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
பொலிஸார் மேற்கொண்ட புலனாய்வு விசாரணைகளைத் தொடர்ந்து வைத்தியர் ஷிஹாப்தீன் சாஃபி கடந்த மாதம் 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
40 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட சொத்துக்கள் அவர் வசமுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருந்ததுடன் அந்த சொத்துக்களை ஏதேனும் அடிப்படைவாத குழு அல்லது பயங்கரவாத குழு அவருக்கு வழங்கியதா என்பது தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.