ஈரானுடன் இணைந்து செயற்பட அமெரிக்கா தயார்

ஈரானுடன் இணைந்து செயற்பட அமெரிக்கா தயார்

by Fazlullah Mubarak 02-06-2019 | 8:07 PM

முன் நிபந்தனைகளின்றி ஈரானுடன் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

சாதாரண நாடொன்று செயற்படும் வகையில் ஈரான் நடந்துகொள்ளுமாக இருப்பின், அமெரிக்காவும் அதனுடன் இணைந்து செயற்படும் என, இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார். சுவிட்ஸர்லாந்தின் வௌிவிவகார அமைச்சர் இக்னாஸியோ கஸிஸ் உடன் இணைந்து, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ சுவிட்ஸர்லாந்தின் பெலின்ஸோனா நகரில் இன்றையதினம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டிருந்தார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வௌியிடும்போதே அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா தமக்கு மதிப்பளிக்கும் வகையில் செயற்படுமிடத்து, அந்நாட்டுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தயாராகவிருப்பதாக ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரொஹானி நேற்றையதினம் தெரிவித்திருந்தார். இருப்பினும் அழுத்தத்தைப் பிரயோகித்து ஈரானை பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளச் செய்ய முடியாதெனவும் அவர் கூறியிருந்தார். ஈரானிய ஜனாதிபதியின் இந்தக் கருத்துக்குப் பதிலளிக்கும் வகையில் கருத்து வௌியிடும் போதே, முன்நிபந்தனைகளின்றி ஈரானுடன் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.