ஹேமசிறி, பூஜித்திற்கு விசேட தெரிவுக்குழு அழைப்பு

ஹேமசிறி பெர்னாண்டோ, பூஜித் ஜயசுந்தரவை விசேட தெரிவுக்குழு முன் அழைக்கத் தீர்மானம்

by Staff Writer 01-06-2019 | 8:49 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவிற்கு, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (04) அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் செயற்படுகின்றது. ரவூப் ஹக்கீம், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ரவி கருணாநாயக்க, ராஜித்த சேனாரத்ன, ஆஷூ மாரசிங்க, ஜயம்பதி விக்ரமரத்ன, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் நலிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் தெரிவுக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர். கடந்த 29 ஆம் திகதி கூடிய இந்த தெரிவுக்குழுவின் விசாரணைகள் ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட்டிருந்ததுடன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரி சிசிர மென்டிஸ் ஆகியோர் அன்றைய தினம் சாட்சி வழங்கியிருந்தனர்.