பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு எதிரான மனுவை பிரதம நீதியரசருக்கு அனுப்ப தீர்மானம்

by Staff Writer 31-05-2019 | 3:37 PM
Colombo (News 1st) கட்டாய விடுமுறையிலுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரிப்பதற்கு பிரதம நீதியரசர் உள்ளிட்ட முழுமையான அவையை நியமிக்குமாறு சட்ட மா அதிபர் இன்று உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு இன்று சிசிர டி ஆப்ரூ, காமினி அமரசேகர மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் புலனாய்வுப் பிரிவு, பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கு தெரியப்படுத்தியிருந்த போதிலும், அதனை தவிர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்காமைக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யுமாறு சட்ட மா அதிபருக்கு உத்தரவிடுமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தோரின் உறவினர்கள் உள்ளிட்டோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதால், முழுமையான அவையை நியமிக்குமாறு, சட்ட மா அதிபர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஆஜரான சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பர்சானா ஜமில் மன்றில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த கோரிக்கையை பரிசீலித்த நீதிபதிகள் குழாம், மனுவை பிரதம நீதியரசருக்கு அனுப்புவதற்கு தீர்மானித்தது. மனு மீதான விசாரணையை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.