களனி பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கை மீள ஆரம்பம்

களனி பல்கலைக்கழகத்தின் மூன்று பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பம்

by Staff Writer 31-05-2019 | 5:09 PM
Colombo (News 1st) மூடப்பட்டிருந்த களனி பல்கலைக்கழகத்தின் மூன்று பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (03) மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. நிலவும் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் கவனம் செலுத்தி, அதற்கேற்றவாறு நடந்துகொள்வதற்கு மாணவர்கள் இணங்கியதையடுத்து, கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க தீர்மானித்ததாக பல்கலைக்கழகத்தின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி விஜயாநந்த ரூபசிங்க தெரிவித்துள்ளார். இதன் பிரகாரம், களனி பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானம், வர்த்தகம் - முகாமைத்துவம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய பீடங்களின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த பீடங்களைச் சேர்ந்த மாணவர்கள் நாளை மறுதினம் (02) பல்கலைக்கழகத்திற்கு வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதலின் பின்னர் பல்கலைக்கழகம் இம்மாதம் 28 ஆம் திகதி திறக்கப்பட்டதுடன், மாணவர்களின் பாதுகாப்புக் கருதி விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார். பல்கலைக்கழகத்தின் சிற்றுண்டிச்சாலை உள்ளிட்ட அனைத்து மண்டபங்களையும் இரவு 9 மணிக்கு பின்னர் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதற்கு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சிலர் எதிர்ப்பு வௌியிட்டதன் காரணமாக அனைத்து மாணவர்களின் பாதுகாப்புக் கருதி பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.