by Staff Writer 31-05-2019 | 6:52 PM
Colombo (News 1st) ஐக்கிய அமெரிக்காவின் அரசியல்-இராணுவ விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் R. Clarke Cooper அடுத்த வாரம் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
மே மாதம் 29 ஆம் திகதியில் இருந்து ஜூன் 7 ஆம் திகதி வரை உதவி இராஜாங்க செயலாளர் சிங்கப்பூர், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கான அவரின் விஜயத்தின் போது, பாதுகாப்பு மற்றும் அமைதியை பேணுதல், கண்ணிவெடிகளை அகற்றுதல், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் இருதரப்புக்கும் முக்கியமான வேறு பிரிவுகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் Patrick M. Shanahan மற்றும் துப்பாக்கி கட்டுப்பாடு - சர்வதேச பாதுகாப்பு தொடர்பான பிரதி செயலாளர் உள்ளிட்ட உயர்மட்ட பிரதிநிதிகள் சிலருடன் ''Shangri-La Dialogue'' என்ற விசேட மாநாட்டில்
R. Clarke Cooper சிங்கப்பூரில் கலந்துகொள்ளவுள்ளார்.
சிங்கப்பூரில் இடம்பெறும் கலந்துரையாடல்களின் போது, சுதந்திர மற்றும் திறந்த இந்து - பசுபிக் வலயம் தொடர்பில் அமெரிக்க பிரநிதிகள் கலந்துரையாடவுள்ளனர்.
இதேவேளை, இந்து - பசுபிக் வலயத்திற்கான உபாய மார்க்கம் தொடர்பான முக்கிய விடயங்கள் குறித்து இந்தியாவிற்கான விஜயத்தின் போது, உதவி இராஜாங்க செயலாளர் R. Clarke Cooper கலந்துரையாடவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய - அமெரிக்க பாதுகாப்பு வர்த்தக நடவடிக்கைகள் தற்போது 15 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வடைந்துள்ளன.