12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இன்று

12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்

by Staff Writer 30-05-2019 | 10:30 AM
Colombo (News 1st) 12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இன்று (30ஆம் திகதி) ஆரம்பமாகின்றது. உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் 1975 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்திய கிளைவ் லொய்ட் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் உலக சாம்பியனாக மகுடம் சூடியது. தொடர்ந்து இதே மேற்கிந்தியத் தீவுகள் அணி 1979 ஆம் ஆண்டிலும் உலக சாம்பியன் பட்டத்தை வென்றது. மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றிப் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த அணியாக இந்தியா திகழ்கின்றது. 1983 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகளை தோற்கடித்த கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி கிரிக்கெட் உலக சாம்பியனான முதல் ஆசிய அணியாகப் பதிவானது. கிரிக்கெட்டில் அன்று முதல் இன்று வரை ஆதிக்கம் செலுத்திவரும் அவுஸ்திரேலியா 1987 ஆம் ஆண்டில் முதல் தடவையாக உலக சாம்பியனானது. 1992 ஆம் ஆண்டில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது. இலங்கை அணி 1996 ஆம் ஆண்டு அர்ஜூன ரணதுங்க தலைமையில் உலக சாம்பியன் பட்டத்தை வென்றது. அதன்பின்னர் 2007 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற போதிலும் இரண்டாமிடத்தையே பெறமுடிந்தது. 2011 ஆம் ஆண்டில் மஹேந்திர சிங் தோனி தலைமையில் வெற்றியீட்டிய இந்தியா இரண்டாவது தடவையாக உலக சாம்பியன் மகுடத்தை தன்வசப்படுத்தியது. 1999 முதல் 2007 வரை தொடர்ச்சியாக மூன்று தடவைகள் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற அவுஸ்திரேலியா 2015 ஆம் ஆண்டு உட்பட இதுவரை ஐந்து தடவைகள் உலக சாம்பியனாகியுள்ளது. இன்று (30ஆம் திகதி) ஆரம்பமாகும் 12ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் 10 அணிகள் போட்டியிடுகின்றன. லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமாகும் முதல் போட்டியில் இங்கிலாந்தும் தென் ஆபிரிக்காவும் மோதவுள்ளன. இலங்கை தனது முதல் போட்டியில் நாளை மறுதினம் நியூஸிலாந்தை கார்டிப் மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.