by Staff Writer 30-05-2019 | 8:14 PM
Colombo (News 1st) தலவாக்கலை பொலிஸ் பிரிவின் ஹொலிரூட் தோட்டத்தில் 24 வீடுகள் தீக்கிரையானதால் பாதிக்கப்பட்ட மக்கள், அங்குள்ள பொது மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மின் ஒழுக்கினால் தீ பரவியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தலவாக்கலை பொலிஸ் பிரிவின் ஹொலிரூட் தோட்டக்குடியிருப்பில் நேற்றிரவு 10 மணியளவில் திடீரென தீ பரவியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனால் வீடுகள் முற்றாக எரிந்து தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
24 வீடுகளைக் கொண்ட குடியிருப்புப் பகுதியிலேயே தீ பரவியதுடன், நூற்றுக்கும் அதிகமானோர் இதனால் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.
இதனையடுத்து, ஹொலிரூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தங்கவைப்பதற்கு நேற்றிரவு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஹொலிரூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்கள் இன்று காலை தோட்ட பொது மண்டபத்திற்கு மாற்றப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு தோட்ட நிர்வாகம், நுவரெலியா பிரதேச செயலகம் மற்றும் பிரதேச மக்களால் இணைந்து வழங்கப்படுவதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான சுகாதார உதவிகள் அரச சார்பற்ற நிறுவனங்களால் வழங்கப்பட்டன.
தீயினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக அரசியல்வாதிகள் சிலரும் இன்று அங்கு சென்றிருந்தனர்.