வைத்தியர் மீதான முறைப்பாடு; இடைக்கால அறிக்கை

குருணாகல் வைத்தியர் மீதான முறைப்பாடு: இடைக்கால அறிக்கையை அமைச்சின் செயலாளரிடம் கையளிக்க திட்டம்

by Staff Writer 30-05-2019 | 7:43 AM
Colombo (News 1st) குருணாகல் வைத்தியசாலையின் வைத்தியர் சேகு ஷிகாப்தீன் மொஹமட் சாஃபிக்கு எதிராக கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குழுவின் இடைக்கால அறிக்கையை இன்று (30ஆம் திகதி) சுகாதார அமைச்சின் செயலாளரிடம் கையளிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் எவ்வாறு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பில் இந்த இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக, பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் லால் பனாப்பிட்டிய குறிப்பிட்டுள்ளார். வைத்தியர் சேகு ஷிகாப்தீன் மொஹமட் சாஃபிக்கு எதிராக கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை மற்றும் அதிலுள்ள முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சின் பணிப்பாளர், டொக்டர் அனில் சமரநாயக்க தலைமையிலான 6 பேர் கொண்ட இந்தக் குழு சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் வசந்தா பெரேராவினால் நியமிக்கப்பட்டது. இலங்கை மகப்பேற்று நிபுணர் சங்கம் சார்பாக விசேட வைத்தியர் லக்‌ஷ்மன் சேனாநாயக்க, மகப்பேற்று நிபுணர் யூ.டி.பீ. ரத்னசிறி, குடும்ப சுகாதார பணிமனையின் வைத்திய நிபுணர் சஞ்ஜீவ கொடகந்தகே, சுகாதார அமைச்சின் பணிப்பாளர் எல்.ஏ. பஸ்நாயக்க, சுகாதார அமைச்சின் விசாரணை அதிகாரி எஸ்.ஐ. குணவர்தன ஆகியோர் இந்தக் குழுவில் அடங்குகின்றனர். இதேவேளை, இந்தக் குழுவிற்கு குருணாகல் போதனா வைத்தியசாலையின் சில வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் நிலையில் அடுத்தகட்ட விசாரணைகள் எவ்வாறு இடம்பெறும் என்பது தொடர்பில் பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் வினவியபோது, இது தொடர்பில் கலந்துரையாடி தீர்மான​மொன்றை எடுக்க எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்