ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படவில்லை - ஜனாதிபதி ஊடகப்பிரிவு

by Staff Writer 30-05-2019 | 2:28 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக இலங்கை பாராளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட தெரிவுக்குழு முன்னிலையில் தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதம அதிகாரி தெரிவித்த கருத்துக்கள் ஊடகங்களில் வௌியாகியிருந்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 2019ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தின் பின்னர் தேசிய பாதுகாப்புச் சபை கூடவில்லை என அந்தச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக தேசிய பாதுகாப்புச் சபையில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் உத்தியோகப் பற்றற்ற முறையில் ஊடகங்களில் வௌிவரத் தொடங்கியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேசிய பாதுகாப்புச் சபையை விட மாறுபட்ட அமைப்பைக் கொண்ட தேசிய பாதுகாப்புக் குழுவை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. குறித்த தேசிய பாதுகாப்புக் குழு கடந்த காலம் முழுவதும் இரு வாரங்களுக்கு ஒரு தடவை தொடர்ச்சியாக கூடியிருந்ததாகவும் சில சந்தர்ப்பங்களில் வாரத்திற்கு ஒரு தடவை குழுவை ஜனாதிபதி கூட்டியிருந்ததாகவும் ஊடகப்பிரிவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் திகதி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் மாதாந்த கூட்டத்தையும் ஜனாதிபதி ஏற்பாடு செய்திருந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 2 மணித்தியாலங்கள் நீடித்த இந்தக் கூட்டத்தின்போது பயங்கரவாதத் தாக்குதல் திட்டம் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக எந்தவொரு அதிகாரியும் ஜனாதிபதிக்கு அறிவிக்கவில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதல் நடத்தப்படலாம் என நட்பு நாடுகள் தகவல் வழங்கியிருந்ததை பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ்மா அதிபர் அல்லது வேறு அதிகாரி ஜனாதிபதியைத் தௌிவுபடுத்தவில்லை எனவும் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இந்தச் சம்பவங்கள் தொடர்பாக ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாக உள்நாட்டு மற்றும் சர்வதேச ஊடகங்கள் வௌியிட்டுள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என ஜனாதிபதி அறியத்தருவதாகவும் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.