முறிகள் மோசடி விவகாரத்தில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டில் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக வழக்கு

முறிகள் மோசடி விவகாரத்தில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டில் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக வழக்கு

எழுத்தாளர் Staff Writer

30 May, 2019 | 1:09 pm

Colombo (News 1st) மத்திய வங்கி முறிகள் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வழங்கியமை தொடர்பில் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக, சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு பிரதம நீதவானுக்கு அறிவித்துள்ளது.

உண்மைக்குப் புறம்பான தகவல்களை வழங்கியமை, தண்டனை சட்டக் கோவையின் 189ஆம் அதிகாரத்தின் கீழ் குற்றமாகும் என அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி லக்மினி கிரிஹாகம நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரவி கருணாநாயக்க, அவரின் புதல்வியான ஒனெலா கருணாநாயக்க மற்றும் மேலும் சிலரிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர், ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி மேலும் தெரிவித்துள்ளார்.

ரவி கருணாநாயக்கவின் குடும்பத்தினருக்கு உரித்தான க்ளோபல் ட்ரான்ஸ்போர்ட்டேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான வங்கிக் கணக்கு, வருமானம் தொடர்பான தகவல்கள் ஆகியவற்றை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வழங்குமாறு கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

எனினும், அந்த உத்தரவின்படி எந்தவொரு செயற்பாடும் முன்னெடுக்கப்படவில்லை என்பதால், விசாரணைகள் முடங்கியுள்ளதாகவும் மன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவின்படி, ஒனெலா கருணாநாயக்க செயற்படாமை தொடர்பில் கவனம் செலுத்துமாறும் அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி லக்மினி கிரிஹாகம நீதிமன்றத்தை கோரியுள்ளார்.

விசாரணைகளுக்குத் தேவையான தகவல்களை வழங்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் வழங்கிய அறிவித்தலுக்கு அமைய, ஒனெலா கருணாநாயக்க மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் எதிர்வரும் 6ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராவதாக அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஒனெலா கருணாநாயக்க, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியதும், நீதிமன்ற உத்தரவின்படி தேவையான தரவுகளை வழங்காமை தொடர்பில் விசாரணை செய்யவுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி லக்மினி கிரிஹாகம இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவை மீறியமை உறுதிப்படுத்தப்படுமாயின், தண்டனை சட்டக் கோவையின் 172ஆம் அதிகாரத்தின் கீழ் ஒனெலா கருணாநாயக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு நீதவான் லங்கா ஜயரத்ன, அரசாங்க சிரேஷ்ட சட்டத்தரணிக்கு உத்தரவிட்டுள்ளார்.

அது குறித்த விசாரணை அறிக்கையை எதிர்வரும் ஆகஸ்ட் 8 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்