நேசமணிக்காக விடிய விடிய பிரார்த்தித்த ரசிகர்கள்

நேசமணிக்காக விடிய விடிய பிரார்த்தித்த ரசிகர்கள்

நேசமணிக்காக விடிய விடிய பிரார்த்தித்த ரசிகர்கள்

எழுத்தாளர் Bella Dalima

30 May, 2019 | 4:26 pm

ஒரு சாதாரண ஃபேஸ்புக் பதிவிற்கு வேடிக்கையாக அளிக்கப்பட்ட பதில் இவ்வளவு தூரம் வைரலாகும் என்று எவரும் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.

Civil Engineering Learners என்கின்ற ஃபேஸ்புக் பக்கத்தில் சுத்தியலின் படத்தை வெளியிட்டு, உங்கள் நாட்டில் இதன் பெயர் என்ன என்று கேட்கப்பட்டது. அதற்குப் பதில் அளித்த நபர் ஒருவர்,

”இதை நாங்கள் சுத்தியல் என்று அழைப்போம். எதிலாவது இதை வைத்து அடித்தால் டங் டங் எனச் சத்தம் எழும்பும். ஜமீன் அரண்மனையில் பெயின்டிங் கன்ட்ராக்டர் நேசமணியின் தலை இந்தப் பொருளால் தாக்கப்பட்டது, பாவம்,”

என்று கிண்டலாக ஃப்ரெண்ட்ஸ் படத்தின் புகழ்பெற்ற நகைச்சுவைக் காட்சியை மையமாக வைத்துப் பதில் அளித்தார்.

உடனே அவருடைய நண்பர், நேசமணி இப்போது நலமாக உள்ளாரா என்று கேள்வியெழுப்ப.. அவ்வளவுதான் ஒரு பெரிய சம்பவத்தின் ஆரம்பமாக அந்த உரையாடல் அமைந்துவிட்டது.

 

இதையடுத்து, ட்விட்டரில் இந்த உரையாடலின் ஸ்க்ரீன் ஷாட் பகிரப்பட்டது. உடனே #Pray_for_Neasamani என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் புதிதாக உருவாக்கப்பட்டது. இதனை வைத்து பலரும் நகைச்சுவையான பதிவுகளை வெளியிட ஆரம்பித்தார்கள்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சையின்போது பேசப்பட்ட விடயங்களை நேசமணியுடன் இணைத்து ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் பதிவுகள் வர ஆரம்பித்தன.

இதனால் ட்விட்டரில் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த #Pray_for_Neasamani, உலகளவில் 6 ஆம் இடமும் பிடித்து அசத்தியது. இதனால் ரசிகர்கள் மேலும் உற்சாகமாகித் தொடர்ந்து நகைச்சுவை நடிகர் வடிவேலு குறித்த பதிவுகளை வௌியிட்டு வருகின்றனர்.

நேற்றிரவு விடிய விடிய ஆங்கிலத்திலும் தமிழிலும் நேசமணி தொடர்பாகப் பலரும் நகைச்சுவையான பதிவுகளை வெளியிட்டதால் #Pray_for_Neasamani நீண்ட நேரம் ட்ரெண்டிங்கில் இருந்தது.

விடிய விடிய நேசமணிக்காக அனைவரும் நகைச்சுவையாகப் பிரார்த்தனை செய்தமை உலகளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

 

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்