வைத்தியர் சேகு ஷிஹாப்தீன் மொஹமட் சாஃபி தொடர்பில் 220 முறைப்பாடுகள் பதிவு

by Staff Writer 29-05-2019 | 8:59 PM
Colombo (News 1st) வைத்தியர் சேகு ஷிஹாப்தீன் மொஹமட் சாஃபி தொடர்பில் இதுவரை 220-க்கும் ​மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக குருநாகல் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர். வைத்தியரிடம் 40 கோடி ரூபாவுக்கும் ​மேற்பட்ட சொத்துக்கள் உள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருந்ததுடன், அந்த சொத்துக்கள் அடிப்படைவாத அல்லது பயங்கரவாத குழு ஊடாக கிடைத்ததா என்பது தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக அவர் சந்தேகத்தின் பேரில் கடந்த 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். வைத்தியர் சாஃபி கைது செய்யப்பட்டதை அடுத்து தாய்மார்கள் பலர் தம்புளை மற்றும் குருநாகல் வைத்தியசாலைகளில் முறைப்பாடு செய்து வருகின்றனர். இன்று 81 பேர் குருநாகல் வைத்தியசாலையிலும் 11 பேர் தம்புளை வைத்தியசாலையிலும் முறைப்பாடு செய்துள்ளனர். குருநாகல் போதனா வைத்தியசாலையை பாதுகாப்பதற்கான அமைப்பு இன்று பகல் வைத்தியசாலைக்கு முன்பாக அமைதிப் போராட்டம் நடத்தியது. சந்தேகநபரான வைத்தியர் தொடர்பில் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளுக்கு எவரும் இடையூறு செய்ய வேண்டாம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.