12ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பம்

பங்களாதேஷுடனான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வெற்றி

by Staff Writer 29-05-2019 | 8:44 AM
Colombo (News 1st) 12ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் ​வேல்ஸில் நாளை (30ஆம் திகதி) ஆரம்பமாகவுள்ளது. இதற்கான முன்னோடியாக நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டமொன்றில் பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் இந்தியா 95 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. கார்டிப்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்தியா சார்பாக விராட் கோஹ்லி 47 ஓட்டங்களை பெற்றார். லோகேஷ் ராகுல் மற்றும் மஹேந்திர சிங் தோனி ஜோடி ஐந்தாம் விக்கெட்டில் 164 ஓட்டங்களை பகிர்ந்து இந்தியாவை சவாலான நிலைக்கு உயர்த்தியது. லோகேஷ் ராகுல் 99 பந்துகளில் 108 ஓட்டங்களை விளாசியதோடு, மஹேந்திர சிங் தோனி 7 சிக்சர்கள் 8 பவுன்டரிகளுடன் 78 பந்துகளில் 113 ஓட்டங்களை பெற்றார். இது உலகக்கிண்ணத்துக்கு முன்னதான பயிற்சி ஆட்டமொன்றில் மஹேந்திர சிங் தோனி குறைந்த பந்துகளில் சதமடித்த இரண்டாவது சந்தர்ப்பமாகும். மத்தியவரிசையில் ஹர்திக் பாண்டியா 21 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 359 ஓட்டங்களை பெற்றது. வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாட களமிறங்கிய பங்களாதேஷ் சார்பாக லிட்டன் தாஸ் 75 ஓட்டங்களை பெற்றார். சௌமியா சர்க்கார், ஷகீப் அல் ஹசன், மஹமதுல்லா, சபீர் ரஹ்மான் உள்ளிட்ட வீரர்களால் 30 ஓட்டங்களை கடக்க முடியவில்லை. முஸ்பிகுர் ரஹீம் 90 ஓட்டங்களை பெற்று வெற்றிக்காக போராடினார். பங்களாதேஷ் அணி 49.3 ஓவர்களில் 264 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.