தாக்குதல் தொடர்பான புலனாய்வுத் தகவல் ஏப்ரல் 8 ஆம் திகதி கிடைத்தது: அரச புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரி 

by Staff Writer 29-05-2019 | 9:54 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று கூடியது. தெரிவுக்குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி இன்று கூட்டத்தில் கலந்துகொள்ளாமையால், கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தலைவராக செயற்பட்டார். ராஜித சேனாரத்ன மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் இன்று கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. ரவி கருணாநாயக்க, நலிந்த ஜயதிஸ்ஸ, ரவூப் ஹக்கீம், ஆஷூ மாரசிங்க, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா ஆகியோர் இன்று கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். விசேட தெரிவுக்குழுவிற்கு ஊடகங்கள் அனுமதிக்கப்பட்டிருந்ததுடன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் ஷாந்த கோட்டேகொட மற்றும் தேசிய புலனாய்வு தலைமை அதிகாரி சிசிர மென்டிஸ் ஆகியோர் இன்று சாட்சியமளித்தனர். தாக்குதல் தொடர்பான புலனாய்வுத் தகவல் தமக்கு ஏப்ரல் 8 ஆம் திகதியே கிடைத்ததாகவும் அத்தகவல் எங்கிருந்து வந்தது என்பது தொடர்பில் அறியமுடியவில்லை என்றும் சிசிர மென்டிஸ் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் குறிப்பிட்டார்.