இந்திய தேசிய புலனாய்வுப்பிரிவினர் நாட்டுக்கு வருகை

இந்திய தேசிய புலனாய்வு முகவரக உறுப்பினர்கள் நாட்டுக்கு வருகை

by Staff Writer 29-05-2019 | 1:42 PM
Colombo (News 1st) இந்திய தேசிய புலனாய்வு முகவரகத்தின் இரண்டு உறுப்பினர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதல்களுடன் தொடர்புடைய இந்தியாவை சேர்ந்தவர்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இந்திய பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அலோக் மிட்டலின் தலைமையிலான குழுவே இலங்கைக்கு வருகை தந்துள்ளதுடன் சந்தேக நபர்கள் தொடர்பிலான இருதரப்பு தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கும் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடையவர்கள் குறித்து ஆராய்வதற்காகவும் குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இந்தியாவின் மீது நடத்தப்படக்கூடியதாக சந்தேகிக்கப்படும் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு பெறுவது இந்த விஜயத்தின் பிரதான நோக்கம் என இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இலங்கை சட்ட அமுலாக்க முகவரங்களின் விசாரணைகளின் அடிப்படையில் பெற்றுக்கொண்ட தகவல்கள் மற்றும் கைது செய்யப்பட் சந்தேகநபர்களின் பெயர்கள், தொலைபேசி இலக்கங்கள், சமூக வலைத்தள கணக்குகள் மற்றும் ஏனைய விடயதானங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது. பயங்கரவாதி சஹ்ரானின் இந்தியப் பயணம் தொடர்பில் இலங்கை புலனாய்வாளர்கள் பெற்றுக்கொண்ட தகவலடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்தியப் பிராந்தியத்தில் முஸ்லிம் அடிப்படைவாதக் கொள்கையை பரவலாக்கும் நோக்கில் சஹ்ரான் ஹாசிம் இந்தியாவிற்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ளதாக இந்திய தேசிய புலனாய்வு முகவரகம் தெரிவிக்கின்றது. சஹ்ரானின் காணொளிகளைப் பார்வையிட்ட பல இந்திய இளைஞர்கள் அடிப்படைவாத கொள்ளைக்குள் அவதானம் செலுத்தியுள்ளமை தொடர்பில் தமக்கு அறியக் கிடைத்துள்ளதாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் இலங்கையர்களுடன் தொடர்புகளை பேணியுள்ளார்களா என்பது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சஹ்ரான் ஹாசிமின் இந்திய விஜயம் தொடர்பில் ஏப்ரல் 28 ஆம் திகதி 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' செய்தி வௌியிட்டுள்ளதுடன் 2018ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின்படி, ஐ.எஸ். பயங்கரவாதிகளின் இலங்கை மீதான தாக்குதல் தொடர்பான தேசிய புலனாய்வு முகவரகத்தின் முன்எச்சரிக்கை குறித்தும் செய்தி பிரசுரித்திருந்தது. ஏ. மொஹமட் ஆசிக், எஸ். இஸ்மாயில், சம்சுதீன், எஸ்.மொஹமட் சலாலுதீன், ஜாபர் சாதீக் அலி மற்றும் சாஹூல் ஹமீட் ஆகிய 6 பேர் சஹ்ரானுடன் தொடர்புகளைப் பேணியுள்ளதாக தேசிய புலனாய்வு முகவரகத்தை மேற்கோள்காட்டி ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி அறிக்கையிட்டிருந்தது. 29ஆம் திகதி கைது செய்யப்பட்ட ரியாஸ் அபூபக்கர் என்பவர் ஹாசிமுடன் முகப்புத்தகத்தில் தொடர்பை பேணியவர் எனவும் தேசியப் புலனாய்வு முகவரகம் வௌிக்கொணர்ந்திருந்தது. அபூபக்கர் என்பவர் சஹ்ரான் ஹாஷீமின் பேச்சினை கேட்பதற்கு இந்திய இளைஞர்களைத் தூண்டியுள்ளதுடன் ஜிகாத்தில் இணைவதற்கும் வலியுறுத்தியுள்ளார். ஐ.எஸ். பயங்கரவாதிகள் சுமார் 6 பேர் இலங்கைக்கு பயணித்துள்ளதுடன் அது தொடர்பிலான விசாரணைகளை இந்திய தேசிய புலனாய்வு முகவரகம் முன்னெடுத்துள்ளது.