புத்தளம் பாடசாலைகளால் மன்னார் மாணவர்களுக்கு அநீதி

இடம்பெயர்ந்தவர்களுக்காக புத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள பாடசாலைகளால் மன்னார் மாணவர்களுக்கு அநீதி

by Staff Writer 29-05-2019 | 7:50 PM
Colombo (News 1st) வட மாகாணத்தில் இருந்து இடம்பெயர்ந்தவர்களுக்காக புத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள பாடசாலைகளால் மன்னாரைச் சேர்ந்த மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர், வட மாகாண ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். 29 ஆண்டுகளுக்கு முன்னர் வட மாகாணத்தில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டதை அடுத்து, மாணவர்களின் கல்வி வசதிக்காக புத்தளத்தில் பாடசாலைகள் அமைக்கப்பட்டு, அங்கு கல்வி கற்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தன. மன்னார் மாவட்டத்துடன் தொடர்புடைய இந்த பாடசாலைகள் தொடர்ந்தும் புத்தளத்தில் இயங்கி வருகின்ற நிலையில், புத்தளத்தைச் சேர்ந்த மாணவர்களும் இந்தப் பாடசாலைகள் மூலமாக பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறுவதாக குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மன்னார் மாவட்டத்தில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கல்வி பயின்று உயர் தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு அநீதி ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில், புத்தளத்தில் கற்கும் மாணவர்கள் பல வசதிகளுடன் கற்றலை மேற்கொண்டு உயர் தரப் பரீட்சைக்கு தோற்றுகின்ற நிலையில், அவர்களும் மன்னார் மாவட்டத்தின் வெட்டுப்புள்ளியின் கீழ் பல்கலைக்கழகங்களுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். இதன் காரணமாக மன்னாரிலேயே இருந்து மன்னாரிலேயே கல்வி கற்கின்ற மாணவர்களுக்கான வாய்ப்புகள் தட்டிப் பறிக்கப்படுகின்றமையினால் கடுமையான பாதிப்புகளை எதிர்நோக்கி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார் புத்தளத்தில் இயங்குகின்ற பாடசாலைகள் புத்தளம் மாவட்டதினுள்ளேயே பதிவு செய்யப்பட வேண்டும். இல்லையெனில் குறித்த பாடசாலைகள் மன்னார் மாவட்டத்திலுள்ள தமது சொந்த இடங்களில் இயங்கி கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வட மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

ஏனைய செய்திகள்