அமித் ஜீவன் வீரசிங்கவிற்கு நாளை வரை விளக்கமறியல்

மஹசோன் அமைப்பின் தலைவர் அமித் ஜீவன் வீரசிங்கவிற்கு நாளை வரை விளக்கமறியல்

by Staff Writer 28-05-2019 | 4:06 PM
Colombo (News 1st) நாட்டின் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மஹசோன் அமைப்பின் தலைவர் அமித் ஜீவன் வீரசிங்க நாளை (29) வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு மேலதிக நீதவான் சலனி பெரேரா, சந்தேகநபருக்காக விளக்கமறியல் நீடிப்பு உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு சட்டம் மற்றும் அவசரகால சட்டத்தின் கீழ் சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக விசாரணை அதிகாரிகள் மன்றுக்கு அறிவித்துள்ளனர். சந்தேகநபரால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இனவாதத்தை தூண்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுவதாக இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 14 ஆம் திகதி ஹெட்டிப்பொல பகுதியில் மோதல் இடம்பெறுவதற்கு முன்னர் ஹெட்டிப்பொல மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் கூட்டம் நடத்தி முஸ்லிம் மக்களுக்கு எதிராக குரோதங்களை ஏற்படுத்தும் வகையில் உரை நிகழ்த்தியுள்ளமை தொடர்பில் தற்போது தகவல்கள் கிடைத்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த குற்றச்சாட்டின் கீழ் பிரதிவாதி குற்றம் இழைத்தமைக்கான சுருக்க அறிக்கையை நாளைய தினம் மன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.