மோடி பதவியேற்பு: பிம்ஸ்டெக் நாடுகளுக்கு அழைப்பு

நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வு: பிம்ஸ்டெக் நாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பு

by Staff Writer 28-05-2019 | 8:43 AM
Colombo (News 1st) பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வுக்கு, பிம்ஸ்டெக் (BIMSTEC) நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்திய மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து நரேந்திர மோடி நாளை மறுதினம் மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ளார். இந்திய அரசாங்கத்தின் அயல்நாட்டு உறவுகளுக்கு முதலிடம் எனும் வகையில் பிம்ஸ்டெக் நாடுகளுக்கு பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பதவியேற்பு விழாவுக்கு பிம்ஸ்டெக் நாடுகளான பங்களாதேஷ், இந்தியா, மியன்மார், இலங்கை, தாய்லாந்து, நேபாளம் , பூட்டானுடன் கிர்கிஸ்தான் ஜனாதிபதி மற்றும் மொரீஷியஸ் பிரதமர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும் பாகிஸ்தான் மற்றும் அதன் நெருங்கிய நாடான சீனாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. எவ்வாறாயினும் மோடியின் தேர்தல் வெற்றி குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்ததுடன், பாரதிய ஜனதா கட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் காஷ்மீர் விவகாரம் தொடர்பில் சில ஒப்பந்தங்கள் எட்டப்படலாம் என அண்மையில் குறிப்பிட்டிருந்தார். எனினும், 2014 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மோடியின் பதவியேற்பு விழாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.