குருநாகல் வைத்தியருக்கு எதிராக 133-க்கும் அதிக முறைப்பாடுகள் பதிவு

by Staff Writer 28-05-2019 | 8:34 PM
Colombo (News 1st) கைது செய்யப்பட்டுள்ள வைத்தியர் சேகு ஷிஹாப்தீன் மொஹமட் சாஃபி தொடர்பில் 133-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக குருநாகல் வைத்தியசாலையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் 13 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. வைத்தியர் சாஃபி கடந்த 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டதுடன், தொடர்ந்தும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பிலேயே அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இதேவேளை, குறித்த வைத்தியர் மேற்கொண்டதாகக் கூறப்படும், சந்தேகத்திற்கிடமான சத்திரசிகிச்சை தொடர்பில் முறைப்பாடு செய்ய குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு, இன்றும் அதிகளவானவர்கள் வருகை தந்திருந்தனர். வைத்தியர் சேகு ஷிஹாப்தீன் மொஹமட் சாஃபிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக 6 பேர் கொண்ட குழுவொன்று சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் பணிப்பாளர் டொக்டர் அனில் சமரநாயக்க தலைமை வகிக்கும் குறித்த குழுவில், இலங்கை மகப்பேற்று நிபுணர் சங்கம் சார்பாக விசேட வைத்தியர் லக்ஷ்மன் சேனாநாயக்க, மகப்பேற்று நிபுணர் யூ.டி.பீ. ரத்னசிறி, குடும்ப சுகாதார பணிமனையின் வைத்திய நிபுணர் சஞ்ஜீவ கொடகந்தகே, சுகாதார அமைச்சின் பணிப்பாளர் L.A.பஸ்நாயக்க, சுகாதார அமைச்சின் விசாரணை அதிகாரி S.I.குணவர்தன ஆகியோர் அடங்குகின்றனர். இந்த சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு, மருத்துவ சபைக்கு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. குருநாகல் போதனா வைத்தியசாலையில் தாயொருவரின் குழந்தையை மற்றுமொருவருக்கு வழங்குவதற்கு முற்பட்டமை தொடர்பில், வைத்தியசாலையின் பணிப்பாளரினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில், அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதேவேளை, சுகாதார அமைச்சு நியமித்துள்ள விசாரணைக்குழு முன்னிலையில் வாக்குமூலமளிக்க குருநாகல் போதனா வைத்தியசாலையின் அனைத்து தொழிற்சங்கங்களும் மறுப்புத் தெரிவித்துள்ளன. இதேவேளை, குருநாகல் பிரதேச மக்கள் மற்றும் மதத்தலைவர்கள், வைத்தியசாலையின் பணிப்பாளருடன் இன்று கலந்துரையாடினர். அதனை அடுத்து, பக்கசார்பற்ற விசாரணையை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்து, வைத்தியசாலை முன்றலில் ஆர்ப்பாட்டத்திலும் அவர்கள் ஈடுபட்டனர்.