ஹிஸ்புல்லா வழங்கிய இடமாற்றங்கள் இரத்து

கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆசிரியர்களுக்கு வழங்கிய இடமாற்றங்கள் இரத்து

by Staff Writer 28-05-2019 | 7:11 PM
Colombo (News 1st) கிழக்கு மாகாண ஆளுநர் M.L.A.M. ஹிஸ்புல்லா மாகாணத்தின் மூன்று மாவட்டங்களினதும் அபிவிருத்திக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, கிழக்கு மாகாண ஆளுநர் M.L.A.M. ஹிஸ்புல்லாவினால் கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றங்களை இரத்து செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத்தாக்குதலின் பின்னர், மே மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளில் கல்வி கற்பித்த முஸ்லிம் ஆசிரியர்களுக்கு மாகாண ஆளுநரினால் இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது. கிழக்கு மாகாண பாடசாலைகளில் கற்பிக்கும் 167 ஆசிரியர்களுக்கு இவ்வாறு இடமாற்றங்கள் வழங்கப்பட்டிருந்தன. இம்மாதம் முதலாம் திகதி முதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் இடமாற்றங்கள் வழங்கப்பட்டிருந்ததாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் I.K.G.முத்துபண்டார தெரிவித்தார். எனினும், ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய குறித்த இடமாற்றங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து, கடந்த 23 ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் 167 பேருக்கு வழங்கப்பட்டிருந்த நியமனங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் I.K.G. முத்துபண்டார தெரிவித்தார்.