வைத்தியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

கருத்தடை சத்திரசிகிச்சை: குருணாகல் வைத்தியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

by Staff Writer 28-05-2019 | 5:37 PM
Colombo (News 1st) கருத்தடை சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள குருணாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் சேகு ஷிஹாப்தீன் மொஹமட் சாஃபி தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி குருணாகல் வைத்தியசாலைக்கு முன்பாக இன்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. தேரர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கறுப்பு பதாதைகளை ஏந்தியவாறு இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது குருணாகல் நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார். இதேவேளை, வைத்தியரான சேகு ஷிஹாப்தீன் மொஹமட் சாஃபி கருத்தடை செய்ததாகத் தெரிவித்து இதுவரையில் 80 முறைப்பாடுகள் குருணாகல் வைத்தியசாலைக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் சுமார் 30 முறைப்பாடுகள் இன்று கிடைத்ததாக குருணாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் சரத்வீர பண்டார குறிப்பிட்டார். வைத்தியர் சேகு ஷிஹாப்தீன் மொஹமட் சாஃபி இதற்கு முன்னர் சேவையாற்றிய தம்புளை வைத்தியசாலையில், அவருக்கு எதிராக 7 முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. கருத்தடை செய்ததாக முறைப்பாடுகளை முன்வைத்துள்ள தாய்மார்களை விசேட மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக டொக்டர் சரத்வீர பண்டார குறிப்பிட்டார். இந்த விசேட மருத்துவ சோதனையை விரைவில் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.