ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட நபர் விடுதலை

ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட நபர் விடுதலை

by Staff Writer 28-05-2019 | 1:42 PM
Colombo (News 1st) பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட திருகோணமலையை சேர்ந்த ஒருவர் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள்தண்டனைக்கு எதிராக குறித்த நபர் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனு இன்று (28ஆம் திகதி) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான குமுதினி விக்ரமசிங்க மற்றும் பிரியந்த பெர்ணான்டோ ஆகியோர் முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது திருகோணமலை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்த ஆயுள்தண்டனையை இரத்து செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், பிரதிவாதிக்கு எதிரான சுமத்தப்பட்டிருந்த அனைத்து குற்றச்சாட்டிக்களிலிருந்தும் அவரை விடுவித்து விடுதலை செய்துள்ளது. 2008 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 ஆம் திகதி திருகோணமலை - லங்காபட்டிணம் பகுதியில் க. அழகுதுறை என்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைக்குண்டு, டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட வெடிபொருட்களுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, 2014 ஆம் ஆண்டு திருகோணமலை மேல் நீதிமன்றம் பிரதிவாதிக்கு ஆயுள்தண்டனை விதித்தது. பிரதிவாதிக்கு விதிக்கப்பட்ட ஆயுள்தண்டனைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. பிரதிவாதிக்கு எதிரான சாட்சியங்கள் உரிய முறையில் உறுதிப்படுத்தப்படவில்லை என பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணிகள் அறிவித்துள்ளனர். அதற்கமை, அரச பகுப்பாய்வு அறிக்கை உத்தியோகபூர்வமாக தயாரிக்கப்படவில்லை எனவும் பொலிஸாரிடம் வழங்கப்பட்ட வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்ட தண்டனை வழங்க முடியாது எனவும் மன்றுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயங்களை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், பிரதிவாதியை விடுவித்து விடுதலை செய்துள்ளது.