'Batticaloa Campus' ஐ அரச பாதுகாப்பு பல்கலைக்கழகமாக அறிவிக்குமாறு கோரி தனிநபர் பிரேரணை

by Staff Writer 27-05-2019 | 9:03 PM
Colombo (News 1st) 'Batticaloa Campus' தனியார் நிறுவனத்தை, அரச பாதுகாப்புப் பல்கலைக்கழகமாக அறிவிக்குமாறு கோரி, தனிநபர் பிரேரணையொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரேரணையை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால சமர்ப்பித்துள்ளார். இவ்வாறான தனிநபர் பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, நாம் வினவியபோது பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க உறுதிப்படுத்தினார். 'Batticaloa Campus' தனியார் நிறுவனம் தொடர்பில் கவனம் செலுத்தி அதற்கு தீர்வு வழங்குவது தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என அந்த தனிநபர் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஏற்பட்டுள்ள அபாயகரமான நிலைமையில் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதற்கு, இலங்கையில் இனியும் இவ்வாறான நிலை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என திலங்க சுமதிபால குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கடும்போக்குவாதமுடைய சிறு பிரிவிடமிருந்து இலங்கையைப் பாதுகாப்பதற்கு, 'Batticaloa Campus' தனியார் நிறுவனத்தை பாதுகாப்பு அமைச்சுக்கு சுவீகரித்து, அரச பாதுகாப்புப் பல்கலைக்கழகமாக அது அறிவிக்கப்பட வேண்டும் என திலங்க சுமதிபால தமது பிரேரணையில் சுட்டிக்காட்டியுள்ளார்.