நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி

நாட்டின் பாதுகாப்பு இயல்புநிலைக்கு திரும்பியுள்ளதை உறுதிப்படுத்தமுடியும் - ஜனாதிபதி

by Staff Writer 27-05-2019 | 4:53 PM
Colombo (News 1st) நாட்டின் பாதுகாப்பு 95 வீதம் இயல்புநிலைக்கு திரும்பியுள்ளதை தம்மால் உறுதிப்படுத்த முடியும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த வெற்றிகரமான சுற்றிவளைப்புக்களே இதற்கான காரணம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இன்று காலை (27ஆம் திகதி) வௌிநாட்டுத் தூதுவர்களுடனான சந்திப்பின்போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஜேர்மனி, அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய சங்கத்தின் தூதுவர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர். இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையை நீக்குவதற்கு உதவி புரியுமாறு தூதுவர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு வருகை தருவதற்கு தமது நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதற்கான ஒத்துழைப்பை வழங்குவதாக வௌிநாட்டுத் தூதுவர்கள் இதன்போது குறிப்பிட்டுள்ளனர். அவசரகால சட்டத்தை நீடிப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பிரிவின் சுற்றிவளைப்புக்களைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். மீண்டும் அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கான தேவை உருவாகவில்லை என தாம் நம்புவதாக ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார். இவ்வாறான மிலேச்சத்தனமான தாக்குதல்கள் மீண்டும் இடம்பெறாமையை உறுதிப்படுத்துவதற்கு பாதுகாப்புப் பிரிவில் மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் புதிய நிறுவன கட்டமைப்புக்களை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.