கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியா இடையே உடன்படிக்கை

by Staff Writer 27-05-2019 | 8:27 PM
Colombo (News 1st) இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியாவுக்கு இடையிலான கூட்டுத் திட்டமாக கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பில் நாம் நேற்று (26ஆம் திகதி) தகவல்களை வௌியிட்டிருந்தோம். இந்தத் திட்டம் தொடர்பில் துறைமுகங்கள் அதிகாரசபை தௌிவுபடுத்தும் வகையில் இன்று அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பிலான உடன்படிக்கையொன்று இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்படவுள்ளதை துறைமுகங்கள் அதிகார சபையின் அறிக்கை உறுதிப்படுத்துகின்றது. உத்தேச புரிந்துணர்வு உடன்படிக்கை ஊடாக தேசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கும் அதற்கான வசதிகளை விரிவுபடுத்துவதற்கும் சர்வதேச பங்காளர்களுடனான உறவை மேம்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை ஊடாக கிழக்கு முனையத்தின் 100 வீத உரிமம் இலங்கை துறைமுகங்கள் அதிகார சபைக்கு கிடைக்கவுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் நடவடிக்கை நிறுவனம் எனும் பெயரில் புதிய நிறுவனமொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதுடன் அதில் 51 வீத உரிமை இலங்கைக்கு கிடைக்கவுள்ளது. ஏனைய தரப்பினர் 49 வீதமான பங்குகளைக் கொள்வனவு செய்ய முடியும் எனவும் துறைமுகங்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்திற்காக ஜப்பானிடமிருந்து பெறப்படவுள்ள கடன் தொகையே, இலங்கை இதுவரை காலத்தில் பெற்றுக்கொண்டுள்ள மிகவும் சிறந்த கடன் நிபந்தனைகளுடன் கூடிய கடன் தொகை என அதிகார சபையின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும், இன்னமும் வரைபு மட்டத்தில் உள்ளதால் அந்த நிபந்தனைகளை இதுவரை அவர்கள் பகிரங்கப்படுத்தவில்லை. துரிதமாக மாற்றமடையும் போட்டித்தன்மைமிகு உலக கப்பல் பொருள் வர்த்தகத்திற்கு ஏற்றவாறு துறைமுகத்தை விஸ்தரிக்கவும் சிறந்த சேவைக்கான சந்தர்ப்பத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளதாக அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.