குருநாகல் வைத்தியர் மீது தொடர்ந்தும் முறைப்பாடுகள்

குருநாகல் வைத்தியர் தொடர்பில் தொடர்ந்தும் முறைப்பாடுகள்

by Staff Writer 27-05-2019 | 9:00 PM
Colombo (News 1st) கைது செய்யப்பட்டுள்ள வைத்தியர் சேகு ஷிஹாப்தீன் மொஹமட் சாஃபி தொடர்பில் இதுவரை 45க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக குருநாகல் வைத்தியசாலையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொலிஸார் மேற்கொண்ட புலனாய்வு விசாரணைகளைத் தொடர்ந்தே வைத்தியர் ஷிஹாப்தீன் சாஃபி கடந்த 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டார் 40 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட சொத்துக்கள் அவர் வசமுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருந்ததுடன் அந்த சொத்துக்களை ஏதேனும் அடிப்படைவாத குழு அல்லது பயங்கரவாத குழு அவருக்கு வழங்கியதா என்பது தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, வைத்தியர் சாஃபியின் பெயரிலுள்ள 17 காணி உறுதிப்பத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அந்த காணிகள் குருநாகலை சூழவுள்ள பகுதிகளில் அமைந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இதேவேளை, சந்தேகநபரான வைத்தியர் மேற்கொண்டதாக கூறப்படும் சில சத்திர சிகிச்சைகள் தொடர்பிலும் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் திகதி சிசேரியன் செய்யப்பட்டதாகவும் தனக்குப் பிள்ளை இல்லை எனவும் அதேநேரம், தற்போது இரு கண்களும் தெரியவில்லை எனவும் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, 2012 ஆம் ஆண்டு 9ஆம் மாதம் 7அம் திகதியே சிசேரியன் செய்யப்பட்டதாகவும் தனக்கு பிள்ளைகள் இல்லை எனவும் தாய் ஒருவர் கூறியுள்ளார். பிள்ளை இல்லாமல் 8 வருடங்கள் இருந்தேன். பின்னர் சிசேரியன் மூலம் பிள்ளை எடுக்கப்பட்டது. எனக்கு காயம் ஏற்பட்டது. பிள்ளையின் வளர்ச்சியும் குறைந்தது. டொக்டர் சாஃபியே சிசேரியன் செய்தார். எனது சத்திரசிகிச்சை தொடர்பில் மீள ஆராய வேண்டும் என மற்றொரு பெண் முறையிட்டுள்ளார். இந்தநிலையில், குருநாகல் போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். விசாரணைகளுக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக இதன்போது அவர்கள் குற்றம் சுமத்தினர்.
நேற்று முதல் சுகாதார அமைச்சின் சில தரப்பினர் ஊடாக இந்த விசாரணைகளுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படுவதை நாம் காண்கின்றோம். ஆகவே அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பிலும் அரச வைத்திய அதிகாரிகள் சங்க கிளை என்ற வகையில் நாம் இதனைக் கூறுகின்றோம். யார் குற்றவாளி, சுற்றாவளி என்பதை அறிய வெண்டிய தேவை அனைவருக்கும் உள்ளது. ஏதேனும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டால் தொழிற்சங்கங்கள் என்ற வகையில் நாம் அதிகபட்ச நடவடிக்கையினை மேற்கொள்வோம்
என அரச வைத்திய அதிகாரிகள் சங்க குருநாகல் கிளையின் செயலாளர் இந்திக்க ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இன்று குருநாகல் வைத்தியசாலைக்கு சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர், அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் கட்சியில் அவர் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டுள்ளார். தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தால் அரச சேவையிலிருந்து விலக வேண்டும். தேர்தலின் பின்னர் அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பித்து ரிஷாட் பதியூதீன் அந்த நடைமுறையை மீறியுள்ளார். இவர் மீண்டும் சேவையில் அமர்த்தியுள்ளனர். அதுவும் சட்டவிரோதமானது எனத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைப் பத்திரத்தினூடாக இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை வியப்பிற்குரிய விடயம் அல்லவென்றாலும் அது உரிய நடைமுறையா என்ற கேள்வியை எழுப்ப நேரிட்டுள்ளது. இது விடயத்தில் சுகாதார அமைச்சு தௌிவுபடுத்த வேண்டும். இவரை மீள சேவையில் இணைத்துக் கொள்வதில் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன நேரடி தலையீடு செய்துள்ளார் என்ற தகவல் எமக்கு கிடைத்துள்ளது. இந்த ஒட்டுமொத்த செயற்பாடுகள் தொடர்பிலும் முறையான பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் என்ற வகையில் தாம் நம்புவதாக,
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதம செயலாளர், வைத்தியர் ஹரித்த அளுத்கே தெரிவித்துள்ளார். இதேவேளை, வடமேல் மாகாண முன்ளாள் சுகாதார அமைச்சர் சந்தியா ராஜபக்ஸ இன்று இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
தேர்தலில் போட்டியிடுவதற்கு 10 நாட்களுக்கு முன்னதாக இராஜினாமா கடிதத்தை கையளிக்க வேண்டும். அந்தக் கடிதம் ஓய்வுபெறுவதற்கு நிகரானது. ஆகவே ஓய்வுபெற்ற அரச ஊழியர் ஒருவரை மீண்டும் அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கான இயலுமை இல்லை. இந்த நியமனத்திற்கான அதிகாரம் அரச சேவைகள் ஆணைக்குழுவிற்கே உள்ளது. அமைச்சரவையால் அதனை செய்ய முடியாது என வட மேல் மாகாணத்தின் முன்னாள் அமைச்சர் சந்தியா ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதற்காக அவர் வைத்தியர் சேவையில் இருந்து விலகினார். பின்னர் ரிஷாட் பதியூதீனின் வேண்டுகோளுக்கு அமைய அமைச்சரவை மீண்டும் அவரை சேவையில் அமர்த்துகின்றது. இந்த நாட்டின் சட்டத்திற்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும். அரச ஊழியர்கள், அரசியலில் ஈடுபடுவதாக இருந்தால் தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தால் அவர் தெரிவு செய்யப்படாவிட்டால் அந்த அரச தொழிலை மீண்டும் கோருவதற்கான இயலுமை கிடையாது. இந்த தவறுக்கு முழு அமைச்சரவையும் பொறுப்பு கூற வேண்டும் என சட்டத்தரணி பிரேமநாத் சி தொலவத்த குறிப்பிட்டுள்ளார்.