வட கொரிய ஆயுதப் பரிசோதனை தொடர்பில் ட்ரம்ப்

வட கொரிய ஆயுதப் பரிசோதனை தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

by Staff Writer 26-05-2019 | 12:52 PM
Colombo (News 1st) வட கொரியா சிறிய ரக ஆயுதங்களையே பரிசோதனை செய்ததாகவும் அதனால் தாம் குழப்பமடையவில்லை எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஜப்பானைச் சென்றடைந்த சிறிது நேரத்தில், அவர் பதிவிட்ட முதலாவது டுவிட்டர் பதிவில் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த ஆயுதப் பரிசோதனைகளால் தமது மக்களில் சிலரும் ஏனையோரும் குழப்பமடைந்ததாகவும் இருப்பினும் தாம் குழப்பமடையவில்லை எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அத்துடன், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் தமக்களித்த வாக்குறுதிகளை மீற மாட்டாரென தாம் உறுதியுடன் இருப்பதாகவும் ட்ரம்ப் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில், வட கொரியாவின் சோதனைகள் ஐ.நா. தீர்மானங்களை மீறுவதாக, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் நேற்றைய தினம் தெரிவித்திருந்தார். இருப்பினும், ட்ரம்பின் தற்போதைய பதிவு இந்தக்கருத்துக்கு முரணாக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு ஜப்பானுக்குச் சென்றுள்ளார். இந்தநிலையில், இரு நாடுகளுக்குமிடையில் காணப்படும் வர்த்தக சமநிலையற்ற தன்மையை நீக்க, உடன்படிக்கையொன்று எட்டப்பட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அத்துடன், வட கொரியாவினால் முன்னெடுக்கப்பட்ட ஏவுகணைப் பரிசோதனை மற்றும் அதன் அணுவாயுதத் திட்டங்கள் தொடர்பிலும் இந்த விஜயத்தின்போது ட்ரம்ப் கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.