பிரித்தானிய பிரதமர் பதவிக்கான போட்டி அதிகரிப்பு

பிரித்தானிய பிரதமர் பதவிக்கான போட்டி அதிகரிப்பு

by Staff Writer 26-05-2019 | 8:08 AM
Colombo (News 1st) பிரித்தானிய பிரதமர் பதவிக்காக போட்டியிடுவதற்கான வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், போட்டி மிகவும் பரபரப்படைந்துள்ளது. பிரித்தானிய பிரதமர் தெரேசா மே பதவி விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவிக்கான போட்டி வலுப்பெற்றுள்ளது. முன்னதாக 4 பேர் போட்டியிடுவதாக அறிவித்திருந்த நிலையில், நேற்றைய தினத்தில் மேலும் மூவர் போட்டியிடுவதற்கு முன்வந்துள்ளனர். பிரித்தானியாவின் சுகாதார அமைச்சர் மட் ஹன்கொக் (Matt Hancock), பிரெக்ஸிட் முன்னாள் அமைச்சர் டொமினிக் ராப் (Dominic Raab) மற்றும் பொதுமக்கள் சபையின் முன்னாள் தலைவர் அன்ட்ரியா லீட்ஸம் (Andrea Leadsom) ஆகியோர் இந்தப் போட்டியில் இணைந்துகொண்டுள்ளனர். ஏற்கனவே பொரிஸ் ஜோன்ஸன், ஜெரேமி ஹண்ட், ரொறி ஸ்ருவேர்ட் (Rory Stewart) மற்றும் எஸ்தர் மக்வே ஆகியோர் போட்டியிடுவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பிரதமர் தெரேசா மே தோல்வியடைந்த, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை தாம் வெற்றிகரமாக முன்னெடுக்கவுள்ளதாக அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். இதனிடையே, ஜூன் மாதம் இரண்டாம் வாரம் வரை கன்சர்வேட்டிவ் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கு விண்ணப்பிக்க முடியுமென்ற ரீதியில், மேலும் பலர் போட்டியிடுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர், பிரித்தானியாவின் பிரதமராவார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூன் மாத இறுதிக்குள் பிரித்தானியாவின் புதிய பிரதமர் தெரிந்தெடுக்கப்படுவார் என, சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதுவரையில் பிரித்தானியாவின் பிரதமராக தெரேசா மே நீடிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.