பாதிப்பை எதிர்நோக்கியுள்ள புகையிலை செய்கையாளர்கள்

2020 ஆம் ஆண்டிற்குள் புகையிலை முற்றாகத் தடை: யாழில் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ள செய்கையாளர்கள்

by Staff Writer 25-05-2019 | 8:04 PM
Colombo (News 1st) 2020 ஆம் ஆண்டிற்குள் இலங்கையில் புகையிலைச் செய்கை முற்றாக தடை செய்யப்படவுள்ளது. இந்நிலையில், இம்முறை புகையிலை செய்கையை மேற்கொண்ட உற்பத்தியாளர்கள் அவற்றினை உரிய விலைக்கு சந்தைப்படுத்த முடியாத நிலையிலுள்ளனர். யாழ்ப்பாணத்தின் பொருளாதாரத்தில் நீண்ட காலமாகவே புகையிலைப் பயிர் செய்கை சிறப்பான இடத்தை வகித்து வருகின்றது. புகையிலை ஒரு விவசாய உற்பத்திப் பொருளாக மட்டுமன்றி, உள்ளூரிலேயே உருவாக்கப்படக்கூடியதாக இருந்த சுருட்டுக் கைத்தொழில்களுக்கு மூலப்பொருளாகவும் அமைந்துள்ளது. யாழ். குடாநாட்டின் தீவகம் மற்றும் வடமராட்சி பகுதிகளில் அதிகளவில் புகையிலை உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. வடக்கின் மொத்த விவசாய செய்கையாளர்களில் புகையிலை விவசாயத்தினை மேற்கொள்வோர் 10.87 வீதம் என்பதும் குறிப்பிடத்தக்கது. புகையிலைக்கான விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், வருமான ரீதியில் புகையிலை உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அறுவடை செய்யப்பட்ட புகையிலைகள் விற்பனை செய்ய முடியாத நிலையில், குடில்களில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன. 2020ஆம் ஆண்டிற்குள் புகையிலை செய்கை முற்றாகத் தடை செய்யப்படும் என உலக சுகாதார ஒன்றியத்திடம் இலங்கை உறுதியளித்துள்ளது. அதற்கிணங்க, புகையிலை உற்பத்தி தடை செய்யப்படுமாயின், மாற்றுப் பயிர்களை விரைவில் அறிமுகப்படுத்தி அதற்கான பயிற்சிகள் மற்றும் ஊக்குவிப்புகளை வழங்கவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.