by Staff Writer 25-05-2019 | 7:44 PM
Colombo (News 1st) நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பாற்றிய வடக்கு, கிழக்கிலுள்ள பல தொழிற்சாலைகள் மீள் இயக்கமின்றி அழிவடைந்து வருகின்றன.
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை 1990 ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்தம் காரணமாக முற்றாக செயல் இழந்தது.
சுமார் 29 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயத்தில் காணப்படும் இந்த தொழிற்சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது.
இதன் காரணமாக தொழிற்சாலையில் பணியாற்றிய 1500 ஊழியர்கள் வேலை இழந்து நிர்க்கதியாகினர்.
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் பாராளுமன்றத்திலும் வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியிலும் பேசப்பட்டனவே தவிர இதுவரை எதுவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும்
எடுக்கப்படவில்லை.
இதேபோல், கந்தளாய் சீனித்தொழிற்சாலையின் நடவடிக்கைகள் 1960ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டன.
21,000 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சீனித்தொழிற்சாலை 1993 ஆம் ஆண்டில் தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு, 1997ஆம் ஆண்டில் மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்றது.
சுமார் 5000 தொழிலாளர்கள் பணிபுரிந்த சீனித்தொழிற்சாலை இன்று சேதமடைந்து காட்சியளிக்கின்றது.
தொழிற்சாலை வளாகம் தற்போது பாழடைந்து காணப்படுவதுடன், கரும்புகள் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களும் பழுதடைந்து காணப்படுகின்றன.
2020ஆம் ஆண்டில் சுமார் 10 இலட்சம் மெட்ரிக் தொன் சீனிக்கான கேள்வி நிலவுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், கந்தளாய் சீனித்தொழிற்சாலையை இரும்பிற்காக விற்கும் நிலை வரை கொண்டு செல்வது நீதியானதா?
நாட்டின் வளங்களை சரியாக பயன்படுத்தி, அபிவிருத்தியின் இலக்கு நோக்கி நகர்வதற்கு இவ்வாறான தொழிற்சாலைகளின் மீள் உருவாக்கம் அத்தியாவசியமானது.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் தொழிற்சாலைகளை மீள இயக்குவது தொடர்பில் பல கட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றபோதிலும் இதுவரை செயல் வடிவம் பெறாமை கவலைக்குரியது.