பதுரலியவில் பாடசாலைக்குள் கைக்குண்டு பொதி மீட்பு

பதுரலியவில் பாடசாலைக்குள் கைக்குண்டு பொதி: விசாரணை குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பு

by Staff Writer 25-05-2019 | 3:58 PM
Colombo (News 1st) மத்துகம - பதுரலிய, திக்ஹேனபுர பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றுக்குள் கைக்குண்டுகளுடன் பொதி ஒன்று மீட்கப்பட்டமை தொடர்பான விசாரணைகள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். சம்பவம் தொடர்பான விசாரணைக்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் இரண்டு குழுக்கள் பதுரலிய பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார். பதுரலிய பொலிஸாரால் நேற்று (24) இரவு சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். பதுரலிய - ஹாடிகல பகுதியை சேர்ந்த 32 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். ஹாடிகல கனிஷ்ட வித்தியாலயத்திலிருந்து 13 கைக்குண்டுகள் நேற்றிரவு கண்டுபிடிக்கப்பட்டன. இரவுநேர பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாவலர், வித்தியாலய வளாகத்திற்குள் கைக்குண்டுகளைக் கண்டுள்ளார். இதனிடையே, தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சமூகத்தில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தும் சந்தர்ப்பவாதிகளின் குறுகிய நோக்கத்தைத் தோற்கடிப்பதற்கு ஒன்றிணையுமாறு பொலிஸ் அத்தியட்சகர், ருவன் குணசேகர பொதுமக்களிடம் கோரியுள்ளார்.