இந்தியா, ஜப்பானுடன் இணைந்து கொழும்பு துறைமுகத்தில் புதிய கொள்கலன் முனையங்களை நிர்மாணிக்கத் திட்டம்

by Staff Writer 25-05-2019 | 9:25 PM
Colombo (News 1st) இலங்கை அரசாங்கம், இந்தியா மற்றும் ஜப்பானுடன் கூட்டு கொழும்பு துறைமுக புதிய கொள்கலன் முனையத்தை நிர்மாணிக்கத் திட்டமிட்டுள்ளதாக ரொய்ட்ர்ஸ் செய்திச்சேவை தெரிவித்துள்ளது. இந்த புதிய முனையத்தை இலங்கை, சீன ஒத்துழைப்பு உடன்படிக்கையின் கீழ் முன்னெடுக்கப்படும் கொழும்பு சர்வதேச கொள்கல முனையத்திற்கு அருகில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனா இலங்கையில் முன்னெடுக்கும் பாரிய முதலீடுகளுக்குப் பதிலாக இவ்வாறான முனையத்தை நிர்மாணிப்பதற்கு ஜப்பானும் இந்தியாவும் முயற்சிப்பதாக ரொய்ட்ர்ஸ் செய்திச்சேவை தெரிவித்துள்ளது. புதிய திட்டத்திற்கான அடிப்படைத் திட்டத்துடனான உடன்படிக்கை விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளதாக, இந்திய உயர்ஸ்தானிகராலயத்தை மேற்கோள் காட்டி அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜப்பான் தூதரகத்தின் இராஜதந்திர அதிகாரியொருவர், அந்த புதிய முனையம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்க எதிர்பார்த்துள்ளதாக ரொய்ட்ர்ஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நிதியில் 0.1 வீதம் வட்டி மதிப்பீட்டின் கீழ், 10 வருட சலுகைக்காலத்தில் 40 வருடங்களில் செலுத்த முடியும் வகையிலான கடனாக இதனை ஜப்பான் வழங்கவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முனையத்தை நிர்வகிப்பதற்கு இலங்கை, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகியன ஒன்றிணைந்து நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதற்கு திட்டமிட்டுள்ளதுடன், முனையத்தின் கொள்கல நடவடிக்கைக்கான நிறுவகத்தை இந்தியாவும் ஜப்பானும் பெயரிட முடியும் எனவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரொய்டர்ஸ் செய்திச் சேவை கூறுகின்ற இந்த முனையம் என்ன? அது வேறு எதுவுமல்ல, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு நுழைவாயிலாகும். இந்த முனையத்தை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கை 2010 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையில் பாரியளவிலான கப்பல்களை நங்கூரமிடுவதற்கு துறைமுக முனையம் இன்மையால், அந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. 9 வருடங்களின் பின்னர் அந்த முனையத்தை இந்தியாவிற்கும், ஜப்பானுக்கும் வழங்க வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது? மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில், சீனாவுடன் நெருக்கமான தொடர்புகள் பேணப்பட்டன என்பது இரகசியமான விடயமல்ல. அதன் பிரதிபலனாக, சீனாவுடன் இணைந்து ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டது.  அதேபோன்று, சீனாவுடன் இணைந்து கொழும்பு சர்வதேச கொள்கல முனைய நிர்மாணிப்பு இடம்பெற்றது. இதுவே தெற்காசியாவில் தற்போது காணப்படும் ஒரேயொரு ஆழமான முனையம். அதற்கு அருகில் ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தில் துறைமுக நகர நிர்மாணிப்பு ஆரம்பிக்கப்பட்டது. இந்த விடயங்களின் பின்புலத்தில் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் சீனாவிற்கு வழங்கப்படுவதைப் போன்று தமக்கும் வழங்கப்பட வேண்டும் என கோர ஆரம்பித்தன. இதனிடையேதான் 2015 இல் ஆட்சி மாற்றம் இடம்பெற்றது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிப்பதற்குப் பெறப்பட்ட கடனை செலுத்த முடியாமையால், ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் முதலீடு எனும் போர்வையில் துறைமுகத்தை சீனாவிற்கு வழங்கியது. இந்தியா, இதில் முரண்பட்டு ஹம்பாந்தோட்டை விமான நிலையம், சம்பூர் மின் உற்பத்தி நிலையம் போன்றவற்றைக் கோரியது. இவை அனைத்திற்கும் மேலாக இந்தியாவிற்கு மிக முக்கியமாக கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு நுழைவாயில் தேவைப்பட்டது. தென்முனைய நடவடிக்கைகள் சீனாவுடன் முன்னெடுக்கப்படும்போது, உபாய நோக்கில் இது இந்தியாவிற்கு முக்கியத்துவம் மிக்கதாகக் காணப்பட்டது. இதற்கு முன்னரே இதனை இந்தியாவிற்கு வழங்குவதற்கு ரணில் விக்ரமசிங்க முயற்சித்தார். இவ்வாறான விடயங்களுக்கு அப்போதைய அமைச்சர் அர்ஜூன ரணதுங்க எதிர்ப்பை வெளியிட்டார். இதனால் அமைச்சுப் பதவியையும் இழந்தார். இறுதியில் மஹிந்த சமரசிங்விற்கு அந்த அமைச்சுப் பதவி கிடைத்தது. இது இறுதித் தருணத்தை எட்டியபோது, ஜனாதிபதி தலையிட நேர்ந்தது. ஒக்டோபர் 26ஆம் திகதி இடம்பெற்ற ஆட்சி மாற்றம் அனைவருக்கும் நினைவிலிருக்கும். அந்த ஆட்சி மாற்றத்திற்கும் இந்த விடயமே மிகப்பிரதானமானதாக அமைந்தது. இறுதியில் இந்தியாவையும் ஜப்பானையும் இணைத்துக்கொண்டு வேறு வழியில், கிழக்குத் துறைமுகத்தை இழப்பதற்கு அரசாங்கம் தயாராகியது. நாட்டிலுள்ள பெறுமதி வாய்ந்த அனைத்தையும் வெளிநாடுகளுக்கு வழங்கினால் எமது அடுத்த சந்ததிக்கு எஞ்சப்போவது என்ன? சரளமாகக் கூறுவதானால் முடியாவிட்டால், நாட்டை விற்றுப் பிழைக்காது விட்டுச் செல்வதே சாலச்சிறந்தது.