சுமார் 100 நாட்களுக்கான நிலுவைச்சம்பளம் வழங்கப்படவில்லை: தோட்டத் தொழிலாளர்கள் விசனம்

சுமார் 100 நாட்களுக்கான நிலுவைச்சம்பளம் வழங்கப்படவில்லை: தோட்டத் தொழிலாளர்கள் விசனம்

சுமார் 100 நாட்களுக்கான நிலுவைச்சம்பளம் வழங்கப்படவில்லை: தோட்டத் தொழிலாளர்கள் விசனம்

எழுத்தாளர் Staff Writer

25 May, 2019 | 7:24 pm

Colombo (News 1st) 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் சுமார் 100 நாட்களுக்கான நிலுவைச்சம்பளம் வழங்கப்படவில்லை என தோட்டத் தொழிலாளர்கள் குறிப்பிட்டனர்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அடிப்படை சம்பளத்தை 700 ரூபாவாக நிர்ணயிக்கும் கூட்டு ஒப்பந்தம் கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் திகதி அலரி மாளிகையில் கைச்சாத்திடப்பட்டது.

2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தம் 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதியுடன் காலாவதியானது.

இதனைத் தொடர்ந்து தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனமும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தினாலும் அந்தப் பேச்சுவார்த்தைகள் கைகூடவில்லை.

புதிய ஒப்பந்தத்தின் பிரகாரம் அடிப்படை சம்பளம் 700 ரூபாவாகவும் மேலதிக கொழுந்து ஒரு கிலோகிராமிற்கான கொடுப்பனவு 40 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கான பங்களிப்பாக 105 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், 2016 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் மக்களுக்கு கிடைத்த பல சலுகைகள் இம்முறை நீக்கப்பட்டுள்ளன.

குறித்த ஒப்பந்தத்தில் அடிப்படை சம்பளம் 500 ரூபாவாகவும் நிலையான கொடுப்பனவு 30 ரூபாவாகவும் வரவுக்கான கொடுப்பனவு 60 ரூபாவாகவும் உற்பத்திக்கான கொடுப்பனவு 140 ரூபாவாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகிவற்றுக்கான பங்களிப்பாக 75 ரூபா அமைந்திருந்தது.

இதன் பிரகாரம், இரண்டு ஒப்பந்தங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள ஒன்றிணைந்த சம்பளத்தின் வேறுபாடு 50 ரூபா மாத்திரமே என்பது குறிப்பிடத்தக்கது.

நிலுவைத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டாலும் அந்தத் தொகை எந்தளவு காலத்திற்கு, எவ்வாறு வழங்கப்படும் என்ற விபரம் உறுதியாக அறிவிக்கப்படவில்லை.

கடந்த கூட்டு ஒப்பந்தம் காலம் தாழ்த்தி கைச்சாத்திடப்பட்டதனால் 103 நாட்களுக்கான நிலுவைச்சம்பளம் இதுவரை தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் 50 ரூபா நாளாந்த சம்பள அதிகரிப்பு காரணமாகவே, மூன்று மாதங்களுக்குரிய நிலுவைச்சம்பளம் தோட்டத்தொழிலாளர்களுக்கு கிடைக்காது ​போனதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

சம்பள பேச்சுவார்த்தையின்போது மூன்று மாதங்களுக்குரிய நிலுவைப் பணத்தினை வழங்குவதற்கு தோட்டக்கம்பனிகள் இணக்கம்
தெரிவித்ததாக தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும் பெருந்தோட்டத்துறை இராஜாங்க அமைச்சருமான வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் நிலுவைப் பணத்தினை பெற்றுக்கொடுப்பதற்கான அழுத்தத்தினை பிரயோகித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த கூட்டு ஒப்பந்தத்தில் தாங்கள் கையெழுத்திடாமையால் நிலுவை சம்பளம் தொடர்பில் எதுவும் கூற முடியாது என தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.இராமநாதன் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்