Batticaloa Campus-இற்கு எவ்வாறு நிதி கிடைத்தது?

Batticaloa Campus-இற்கு எவ்வாறு நிதி கிடைத்தது: மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரிக்க தீர்மானம்

by Staff Writer 24-05-2019 | 3:47 PM
Colombo (News 1st) Batticaloa Campus Private Limited எனும் நிறுவனத்திற்கு நிதி வழங்கப்பட்டமை தொடர்பில் ஆராய மத்திய வங்கியின் அதிகாரிகளை அழைத்து கருத்துக்களைக் கேட்டறிவதற்கு உயர்கல்வி தொடர்பில் ஆராயும் செயற்குழு தீர்மானித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை (27) விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக செயற்குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷூ மாரசிங்க தெரிவித்துள்ளார். இந்த நிறுவனத்தின் பெயர் பல தடவைகள் மாற்றப்பட்டுள்ளதாகவும் இந்த கட்டடம் பல்கலைக்கழகம் அல்லவெனவும் அவர் கூறியுள்ளார். அரபு நாடுகளைப் போன்ற தோற்றம் கொண்டதாக இது அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டதாக ஆஷூ மாரசிங்க தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்த நிறுவனத்தை நிர்மாணிப்பதற்காக சுமார் 3600 மில்லியன் ரூபா நிதி எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பில் ஆராயவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கடன் பெற்றுக்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகின்ற போதிலும் முதலீட்டு சபையினூடாக எவ்வாறு நிதி கிடைத்தது எனவும் ஆஷூ மாரசிங்க கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பில் மக்கள் வங்கி என்ன தீர்மானங்களை எடுத்தது என்பது குறித்தும், மத்திய வங்கி முன்னெடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பிலும் எதிர்வரும் திங்கட்கிழமை ஆராயவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, குறித்த நிறுவனம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் அறிக்கை அடுத்த மாதம் முதல் வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷூ மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.